பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

என்று அபிராமிபட்டர் பாடுகிறார். எம்பெருமாட்டி குங்குமத்தைப் போன்ற சிவந்த திருமேனி உடையவள். இவ்விருவருக்கும் குழந்தையாகிய முருகனை, "செய்யன் சிவந்த ஆடையன்" என்று நக்கீரர் பாடுகிறார். "பவளத்தன்ன மேனி" என்று பெருந்தேவனார் துதிக்கிறார்.

சிவந்த மேனியை உடைய முருகப் பெருமானை ஈன்ற தாய், செம்பொன்னாலான பாவையைப் போல ஒளிர்கிறாள். அந்தப் பொற்பாவைதான் இந்தப் புவனங்கள் எல்லாவற்றையும் ஈன்றாள். புவனம் என்பது உலகம். இந்த உலகத்தை எல்லாம் ஈன்றவள் பொற்பாவையாகிய எம்பெருமாட்டி ராஜராஜேசுவரி. அவள் தனக்கு ஒரு பயனைக் கருதிப் பெறவில்லை. உயிர்கள் திருந்த வேண்டும், ஒழுங்குபட வேண்டுமென்று ஈன்றாள்; படைததாள்.

உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டுமானால் தனி உயிராக இருந்தால் இயலாது. அவை எப்போதும் ஏதேனும் ஒன்றோடு சேர்ந்தே இருக்கும். ஒன்று, அவை பாசத்தோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பதியோடு இணைந்திருக்க வேண்டும். பாசத்தோடு இணைந்திருக்கிற வாழ்க்கையே நம் வாழ்க்கை. பதியோடு இணைந்து இன்புறும் வாழ்க்கையே முத்தி. பாசத்தோடு இணைந்திருக்கும் உயிர் பதியோடு இணைய வேண்டுமானால் பல பிறவிகள் எடுத்து எடுத்துத் திருந்த வேண்டும். உயிர்கள் யாவும் திருந்த வேண்டுமென்பதற்காகவே பராசக்தி தனு, கரண புவன போகங்களை அவற்றுக்குக் கொடுத்திருக்கிறாள்.

"புவனங்கள் ஈன்ற பொற்பாவை என்றுதானே சொல்கிறார்? தனு கரண புவன போகங்களை எல்லாம் ஈன்றவள் அவளேயானால் மற்றவற்றைச் சொல்லவில்லையே? இப்படித் தோன்றலாம். அந்த ஒன்றைச் சொன்னால் அதனோடு இனமான மற்றவற்றையும் கொள்ள வேண்டும். அதை உபலட்சணம் என்று இலக்கணக்காரர் சொல்வர். "அம்மா சாதம் போட்டாள்" என்று குழந்தை சொன்னால், "அம்மா சாதம் மாத்திரம் போட்டாள்" என்றா கொள்கிறோம்? "சாதம் போட்டாள்; கறி போட்டாள்; பச்சடி பரிமாறினாள்; குழம்பு விட்டாள், ரசம் விட்டாள்" என்று எல்லாப் பொருளையும் அளித்ததாகவே கொள்கிறோம். நாயனம் மிக அழகாக வாசித்தான் என்றால் நாயனம் வாசித்ததோடு

க.சொ.1-12

169