பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

முருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேகமாகப் போன போது அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் காற்று அடித்தது. அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேரு கிரியே அசைந்தது.

உயர்வு நவிற்சி

விஞன் எதையேனும் சிறப்பித்துச் சொல்லப் புகுந்தால் சில சமயங்களில் அதை அழகுபட மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம். நம் நண்பர் ஒருவரை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. அவர் திடீரென்று வருகிறார். நாம், "அடேயப்பா, உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆயிற்றே!" என்கிறோம். பல பல லட்சம் ஆண்டுகளைக் கொண்ட ஒரு யுகமா ஆயிற்று? ஆறேழு நாட்களாகத்தான் அவரைப் பார்க்கவில்லை. இருந்தாலும் யுகமென்று சொல்கிறோம். ஒரு வாரம் பார்க்காததனால் பல காலமாகப் பார்க்காதது போன்ற உணர்ச்சி தோன்றியது. அதை அப்படியே சொல்லாமல் யுகம் ஆயிற்றே என்கிறோம். கதை எழுத்தாளர்களும் இம்முறையை ஆளுகிறார்கள். மிக உயர்ந்த வீடு என்று சொல்வதற்கு, வானத்தை முட்டும் வீடு என்று சொல்கிறார்கள்.

நாம் ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒவ்வோர் அளவு கருவி வைத்திருக்கிறோம். அடி, முழம் என்று துணியை அளக்கிறோம். மைல் என்று தூரத்தை அளக்கிறோம். படி என்று தானியத்தை அளக்கிறோம். இப்படியே உயர்வை அளப்பதற்குக் கவிஞர்கள் வைத்துக் கொண்ட அளவுகளில் ஒன்று மிகை. இதை உயர்வு நவிற்சி என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.

பெரும்புலவராகிய அருணகிரியார் வீர மூர்த்தியாக முருகப் பெருமான் எழுந்தருளியதைச் சொல்ல வந்து, அவனுடைய வேகத்திற்கு ஏற்ப மயில் வாகனமும் வேகமாகப் போயிற்று என்கிறார். வேகத்தை எப்படிச் சொல்வது? ஒரு கார் வேகமாகப் போவதை வருணிக்கும்போது, 'பக்கத்தில் உள்ள சருகுகள் பறந்து ஓடின. புழுதி மண்டலம் கிளம்பிற்று' என்று சொல்வது போல, "மயில் வேகமாகப் போயிற்று. அதன் பீலியின் கொத்து அசைந்த தனால் வீசிய காற்றில் மேரு கிரி அசைந்தது" என்று மிக அழகாக மிகைப்படுத்திச் சொல்கிறார். பிறகு, மயில் அடி எடுத்து வைத்து நடந்ததாம்.

316