பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உலகில் பிறந்து புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவி நோய் உண்டாகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தாம், உயிரைப் பிடிக்கும் நோய்க்குக் காரணம். புண்ணியம் செய்தல் எப்படி நோய்க்குக் காரணமாகும் எனக் கேட்கலாம். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும், மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவே, பிறப்பு ஆகிய பிணி புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வாருக்கு உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும், இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பாகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அநுகூலமாக இருக்கும்; இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும்.

"இருள்சே ரிருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

என்கிறார் வள்ளுவர். இரண்டு வினைகளையும் இருள்சேர் வினை என்று சொல்கிறார். நாம் செய்கின்ற வினைகளான புண்ணியம், பாவம் ஆகியவற்றினால் உயிரைப் பற்றும் பிறப்பாகிய நோய் வருகின்றது. இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமானவை உடம்பினால் நாம் செய்கின்ற செயல், வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சு, நெஞ்சினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை.

மூவகை மோனம்

பிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால்தானே இன்பம்? ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் நழுவ வேண்டும்; மூன்று கரணங்களும் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்,செயலிழந்து போனால் புண்ணியம் இல்லை; பாவம் இல்லை. புண்ணிய பாவம்

292