பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

ப்ரமம் நீங்கினால் கட்டு நீங்கும்; கட்டு நீங்கினால் அசட்டுச் செயல் நீங்கும்; அது நீங்கினால் தவிப்பு நீங்கும்.

2

முதலில் அருணகிரியார் பிரார்த்தனையை வெளியிட்டார். பிறகு முருகனைப் பற்றிச் சொல்கிறார்.

ஆண்டவன் அமரர்களுக்கு மாத்திரம் இன்பம் தருபவன் அல்லன், பேய்களுக்கும் இன்பம் நல்குபவன். "நான் மனிதனாக நின்று கேட்கிறேன். உன் திருக்கோயில் வந்து வணங்கிக் கேட்கிறேன்; சூரன் முதலிய அசுரர்களைக் கொன்றதனால் தேவலோகம் பிழைத்தது. சுயராஜ்யம் பெற்ற தேவர்கள் மாத்திரம் அதனால் சந்தோஷம் அடையவில்லை. மற்றொரு சாதியார்க்கும் நீ இன்பம் தந்தாய்; பேய்களும் களித்தன. பேய்களுக்கும் இன்பம் தந்த நீ, மனிதனாக இருக்கிற எனக்கு இன்பத்தைத் தரக் கூடாதா?" என்று கேட்பதுபோல, முருகப் பெருமான் சூர சங்காரம் செய்த காலத்தில் பேய்கள் இன்பக் களிப்பினால் குதித்துக் கும்மாளம் போட்டன என்று சொல்ல வருகிறார்.

பேய்க்கூத்து

போரைப்பற்றிச்சொல்லும் பாடல்கள் பலவற்றைப் பழங்கால முதற்கொண்டு புலவர்கள் பாடியிருக்கிறார்கள். போர் நிகழ்ச்சியில் பல துறைகள் உண்டு. தலைவனுக்கும் அவனுடைய பகைவர்களுக்கும் போர் மூண்டதை வர்ணிக்கும் போது, "பகைவர்கள் போர்க்களத்தில் இறந்து ஒழிந்தார்கள்; இறந்து கிடந்த பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூத்தாடின; தங்கள் நகங்களால் பிணத்தைப் பீறிப் பீறித் தின்றன" என்று வருணிப்பது ஒரு மரபு. பிற்காலத்தில் எழுந்த நூல்களிலும் இந்த மரபைப் பார்க்கலாம். போர் நிகழ்ச்சிகளைச் சொல்லும் புறத் துறைகளில் பேய்கள் வரும் துறைகளும் சில உண்டு.

பிணத்தைத்தான் உண்ண வேண்டுமென்று பேய்களுக்குப் பைரவர் சாபம் கொடுத்தார் என்பது புராணச் செய்தி. உயிரோடு இருக்கிறவர்களை உண்ணக் கூடாதாம். பிணம் எங்கே கிடைக்கும்? மயானத்தில் கிடைக்கும். அங்கே பேய்கள் இருக்கும்.

221