பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

தம் விருப்பப்படியே ஒடியாடி, கடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும்.

கோயில், அங்கே உள்ள மூர்த்தி, அதற்குச் செய்யும் அலங்காரம், அங்கே கொடுக்கும் பிரசாதம், அங்கே பாடும் திருப்புகழ் இவை அத்தனையும், நம் பொறிகளாகிய மதம் பிடித்த யானைகளுக்கு உணவாகி, அவற்றின் மதத்தை மாற்றி நல்ல நெறியிலே அழைத்துச் சென்று கடைசியில் அவற்றைப் படுக்க வைக்கின்றன. இது பக்தி நெறியாகிய எளிய வழி. "ஆண்டவனிடத்தில் சென்று நீ பக்தி செய். அவனைப் பூசை செய். உன் கைகளினாலேயே அவனுக்கு அலங்காரம் பண்ணிக் கண்குளிரப்பார். அவன் புகழைப் பாடு. அவன் பெருமையைக் கூறுகின்ற பாடல்களை நன்றாகக் கேட்டு அநுபவி. அவன் திருக்கோயிலைச் சுற்றி வலம் வா" என்று நம் நாட்டுப் பெரியவர்கள் சொன்னது, ஐம்பொறிகளாகிய மதம் பிடித்த யானைகள் தத்தம் விருப்பப்படியே உலகத்திலுள்ள பொருள்களை அநுபவிக்கும்போது அவற்றை இறைவனுடன் சம்பந்தப்படுத்தி அநுபவிக்கச் செய்யவும், வரவர அந்தத் தொடர்பு நெருங்க நெருங்க அவற்றை ஒடுங்கச் செய்யவுமே ஆகும்.

மனத்திண்மை

ம் மனம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஆனால் அவற்றைச் செயலிலே செய்ய முடியவில்லை. நினைக்கும் மனத்திற்குத் திண்மை இல்லை. நம் மனத்திலே திண்மை இல்லை என்பதற்கு அடையாளம், நாம் நினைக்கிறதை நினைக்கிறபடியே செயலில் செய்ய முடியாதது தான். உண்மையில் இதைவிடப் பலவீனம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

நாம் தொட்ட மண் எல்லாம் தங்கமாக மாற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்த மாதிரி மாற்றக் கூடிய சக்தி நமக்கு இல்லை. அது நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஆசை. அப்படியின்றி நம்மால் செய்யக்கூடிய காரியத்தைச் சில சமயங்களில் நினைக்கிறோம். பக்கத்து வீட்டுக் குழந்தை வாழைப்பழம் வேண்டுமென்று அழுகிறது. அது ஏழைக் குழந்தை. தெருவிலே

143