பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

சூரனுக்கு ஜாதகம் பார்த்துக் சொன்னவரே கிரெளஞ்சாசுரனுக்கும் பார்த்துச் சொல்லியிருக்கிறார். "உலகில் ஒரு குழந்தையின் அழுகை ஒலி கேட்கப் போகிறது. தன் கை வேலினால் உன்னை அணு அணுவாக்கி நீ உருக்குலைந்து போகும்படி செய்பவன் இந்த உலகத்தில் அவதாரம் செய்துவிட்டான் என்று அப்பொழுதே தெரிந்துகொண்டுவிடலாம்" என்று அவர் சொன்னதைக் கிரெளஞ்சாசுரன் கேட்டிருக்கிறான். ஆகவே இன்று, சரவணப் பூந்தொட்டிலில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி அழுகின்ற குழந்தையின் அழுகுரல் கேட்டவுடனே, அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு ஐயோ என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒரு நாள் இந்த ஜோசியர் சமுத்திரத்தின் பக்கம் போயிருக்கிறார். சமுத்திர ராஜனைப் பார்த்தவுடனே அவனுக்கு என்ன ஏற்படப் போகிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. "நீ மிகப் பாவியாக இருக்கிற சூரன் ஒளிந்து கொள்வதற்கு இடம் அளிக்கப் போகிறாய். அப்போது ஒருவன் தன் கை வேலினாலே நீ வறண்டு போகும்படி செய்யப் போகிறான். அந்தக் குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும்போதே நீ உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். வேலினாலே தன்னைச் சுவறச் செய்யப் போகிற குழந்தையின் அழுகைக் குரல் எப்போது கேட்கப் போகிறது என்று அவன் கலங்கி யோசனை பண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் இந்தச் சத்தம் கேட்டது. மற்றக் குழந்தைகளின் அழுகைக் குரலுக்கும், இந்தக் குழந்தையின் அழுகைக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாதா? 'தன்னைக் கொல்ல வந்த காலன் பிறந்துவிட்டான்' என்று அவன் 'ஒ'வென்று அலற ஆரம்பித்துவிட்டான்.

குழந்தை விம்மி அழ அழ இவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை ஒரு முறை அழுதான். அதைக் கேட்ட மாத்திரத்தில், 'பெரும்பாவியாகிய சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுக்கப் போய் நாம் அழிந்து போகப் போகிறோமே!’ என்று கடல் அழ ஆரம்பித்தது; அந்தக் குழந்தையின் கை வேலினால் சூரனுடைய கவசம் போல் இருக்கிற நாம் தவிடு பொடியாவோமே என்று கிரெளஞ்சாசுரன் அழ ஆரம்பித்தான்; 'நம்மை யாரும் அடக்குவதற்கு இல்லை என்று எண்ணி இதுவரையிலும்

183