பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

மல்லவா? தனக்குப் பால் கொடுக்கக் கார்த்திகை மாதர்கள் இன்னும் வரவில்லையே என்பது போல அழுதான். எம்பெருமானுடைய கண்களிலிருந்து அவதாரம் செய்த குழந்தை முருகன். அவனுக்குக் கார்த்திகை மாதர்கள் பால் கொடுக்காவிட்டால் அவன் வளர மாட்டானா? பால் குடிக்கும் வியாஜமாக அந்தக் கார்த்திகை மாதர்களுக்கு பெருமையை அளிக்க வேண்டுமென்ற கருத்தோடு அழுதான். அவர்கள் ஓடி வந்தார்கள. பச்சிளம் பாலகனாகப் படுத்து அழுது கொண்டிருந்த பெருமானுக்குப் பால் கொடுத்தார்கள். அதனால் அவர்கள் மிகப் பெரிய பாக்கியத்தை அடைந்தார்கள். வானிலே எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் கிருத்திகை என்றவுடன் நமக்கு முருகன் நினைவு வருகிறது. அவனுக்குப் பால் கொடுத்த மாதர்களை நினைந்து நாம் உபவாசம் இருக்கிறோம். முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் அவதாரம் செய்த போதிலும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிகப் பெருமை ஏற்பட்டுவிட்டது. முருகன் கார்த்திகேயன் என்ற திருநாமத்தை ஏற்று அதன் மூலமாக அவர்களுக்குச் சிறப்பு உண்டாகச் செய்தான். "கார்த்திகேயன் என்னும் நாமம் முருகனுக்கு அமையும்; கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவோர் பெரும் பேற்றைப் பெறுவர்” என்று சிவபெருமான் வரம் தந்ததாகக் கந்தப்புராணம் கூறுகிறது.

“கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன் எனும் பெயர்ஆகுக மகிழ்வால்எவ ரேனும்
நூந்தம்பக லிடை இன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தம்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்."

ஓர் அரசன் பிறந்தபொழுதே தாயை இழந்தான். தாயற்ற அவனை எடுத்துப் பால் கொடுத்து வளர்த்த ஒரு பெண்ணுக்கு அவன் சிங்காதனம் ஏறியவுடனேயே ஒரு கிராமம் முழுவதையும் சாசனம் பண்ணிக் கொடுத்தான் என்று கதை சொல்வதுண்டு. சாமானிய அரசனே இப்படிச் செய்தான் என்றால் இந்த உலகம் முழுவதற்கும் எந்தக் காலத்திலும் அரசனாக விளங்கும் எம் பெருமான் தான் அவதாரம் செய்த காலத்தில் தனக்குப் பால் ஊட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சாசுவத பெருமைப் பட்டயம் வழங்கியதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பெருமை அவர்களுக்குச் சார வேண்டுமென்ற கருணையோடுதான் அவன் பசி என்ற காரணத்தைக் கொண்டு அழுதான்.

181