பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உண்டாகும் பசிபோன்றது அல்ல அது. பிறருக்கு அருள் செய்ய வேண்டும், தனக்குத் தொண்டு செய்து பிறர் நன்மை அடைய வேண்டும் என்ற கருணையாகிய பசி அது. கருணைப் பசி எடுத்த குழந்தை உலகியலை ஒட்டிப் பாலுக்காக அழும் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான்.

கார்த்திகை மாதர்

கார்த்திகை மாதர்கள் ஆறு பேர். சப்த ரிஷிகள் என்று சொல்லும் ஏழு முனிவர்களுடைய மனைவிமார்களும் வானில் ஏழு நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் சிறப்பானவள் அருந்ததி. அவள் தன் கணவராகிய வசிஷ்டருக்கு அருகிலேயே வானில் ஒளிர்கிறாள். மற்ற ஆறு முனிவர்களுடைய மனைவிமாரும் கிருத்திகா நட்சத்திரங்களாக வானிலே இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆறு மாதர்களும் சரவணப் பொய்கையில் இருந்த முருகனுக்கு வளர்ப்புத் தாய்களாக அமைந்தார்கள். இந்தக் குழந்தைக்கு அவர்கள் பால் கொடுத்து வளர்த்தார்கள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவையாகிய உமா தேவியின் திருமுலைப் பாலை முருகன் அருந்தினான் என்று முதலில் சொன்ன பிறகு, கார்த்திகை மாதர் அறுவருடைய பாலைக் குடிக்க விரும்பி அழுதான் என்று சொல்கிறார். சரவணப் பொய்கையில் தாமரையாகிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த முருகனுக்கு முதலில் கார்த்திகை மாதர்களே பால் கொடுத்து வளர்த்தார்கள். பிறகு உமாதேவி வந்து வாரி அணைத்து, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஷண்முக நாதனாக உருவம் ஏற்ற முருகப் பெருமானுக்குப் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் ஊறிய பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அருத்தினாள் என்பது வரலாறு. இது தோத்திர நூல் ஆனதால் முன் பின்னாகச் சொல்கிறார். கதையைச் சொல்வதானால் முறை பிறழாமல் சொல்வார். அலங்காரமாக அமைக்கும் கவியில் இந்த முறை முன்பின்னாக மாறுவதில் தவறு இல்லை.

கங்கை தன்னிடம் விட்ட ஆறு பொறிகளையும் எடுத்துப் போய்ச் சரவணப் பொய்கையில் விட்டாள். அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அவை அழுதன. 'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருத்த

180