பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலின் பெருமை

புறப்பட்டான். பூமியைத் தேராக்கி அதை நன்றாக அலங்காரம் பண்ணினான். அதை இழுக்க வேண்டுமே வேதமாகிற நான்கு குதிரைகளைப் பூட்டினான். சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு சக்கரங்களைக் கோத்தான். நான்கு வேதங்களையும் உணர்ந்தவன் பிரமா. ஆதலால் தேரை ஓட்டுவதற்குரிய சாரதியாக அவனைக் கொண்டான். மேருவை வில்லாக வளைத்தான். வாசுகியை நாணாகப் பூட்டினான். வாயு, அக்கினி, திருமால் ஆகிய மூன்று பேரையும் அம்பாகக் கொண்டான். அம்புக்கு முன் பக்கம் திருமாலையும், நடுப்பக்கம் அக்கினியையும், வால் பக்கம் வாயுவையும் வைத்தான். வேகமாகப் போவதற்காக வால் பக்கம் வாயு இருந்தான். இப்படியே தேரை அணி செய்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது சற்று அகங்காரம் கொண்டார் திருமால்; 'சிவ பெருமான் அந்த அசுரர்களோடு போர் செய்யப் புறப்பட்டாலும், அம்பின் நுனியில் இருக்கிற நான்தானே அவர்கள் மேல் பாய்ந்து அழிக்கப் போகிறேன்? என்று எண்ணிக் கொஞ்சம் கர்வத்தோடு இருந்தார்; தமக்குக் கர்வம் உண்டானது போலக் காட்டிக் கொண்டார். அதைப் போக்கச் சிவபிரான் எண்ணினான்.

வேஷம் மாறுதல்

சிவபுராணத்தில் திருமாலுக்கு அகங்காரம் வந்ததாகவும், சிவபெருமான் அடக்கியதாகவும் வருகிறது. விஷ்ணு புராணத்தை எடுத்துப் பார்த்தால், சிவபெருமானுக்கு அகங்காரம் சில சமயங்களில் உண்டானதாகவும், திருமால் அடக்கியதாகவும் இருக்கும். அவற்றைக் கொண்டு சிவபெருமான் உயர்ந்தவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்னும் வாதத்தில் நாம் இறங்கிவிடக் கூடாது. நாடகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பலவிதமான நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். ஒரு நாடகத்தில் அண்ணன் அரசனாக வருகிறான்; தம்பி வேலைக்காரனாக வருகிறான். மற்றொரு நாடகத்தில் தம்பி அரசனாக வருகிறான்; அண்ணன் வேலைக்காரனாக வருகிறான். இரண்டு பேரும் ஒரே நாடகத்தில் அரசனாக இருக்க முடியாது அல்லவா? அவர்கள் இரண்டு பேரில் யாரும் உண்மையில் அரசன் அல்ல; வேலைக்காரனும் அல்ல. மாறிமாறி வேலைக்காரனாகவும் அரசனாகவும் வந்தாலும், இரண்டு பேரும் உண்மையில் சமமானவர்களே.

107