பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கந்த புராணக் கதையை வெறும் கட்டுக்கதை போல எண்ணக் கூடாது. அதனூடே இருக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு தத்துவம் உண்டு. சிவபெருமானுடைய நான்கு முகங்கள் நான்கு பக்கம் நோக்கியிருக்கின்றன. மேல் நோக்கிய முகம் ஒன்று, கீழ் நோக்கிய முகம் ஒன்று. ஆக ஆறுமுகங்களையும் கொண்டு ஷண்முகநாதனை அவன் வெளிவரச் செய்தான். ஈசானம், தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாமதேவம் என்பன அவனுடைய ஐந்து முகங்கள். அவற்றால் இருபத்தெட்டு ஆகமங்களை அருளினான். அவற்றோடு அதோமுகமும் சேர்ந்தால் ஆறு முகங்களாகும். அதோமுகம் வெளிப்பட இராது.

"அந்திக்கு நிகர்மெய் யண்ணல்
அருள்புரிந் தறிஞ ராயோர்
சிந்திக்குந் தனது தொல்லைத்
திருமுகம் ஆறுங் கொண்டான்"

என்று கந்தபுராணம் சொல்கிறது.

ஐம்பூத முத்திரை

தியும் அந்தமுமாக இருக்கிற பரமேசுவரன் உலகத்திற்கு அருள் செய்வதற்காகக் கந்தப் பெருமானை அருளினான். ஐந்து முகக் கடவுள் ஆறுமுகக் கடவுளின் மூலம் தன் கருணையை மிகுதியாகப் பரவச் செய்தான்.

வாக்கு, மனம் ஆகிய சரணங்களுக்கு அப்பால் இருக்கிற கடவுள் இந்த உலகத்தில் அவதாரம் செய்யும்போது இதற்கு ஏற்ப வர வேண்டும். உலகம் என்பது ஐந்து பெரும் பூதங்களின் சேர்க்கை. ஆதலால் இங்கே வரும்போது அப்பூதங்களின் சம்பந்தத்துடனே வர வேண்டும். இறைவனது சரீரம் பூதத்தினால் அமைந்த சரீரம் அல்ல. அது ஞானத்தினால் ஆன உடம்பு. அது உலகத்திற்கு வர வேண்டுமென்றால் உலகத்தின் முத்திரையை அதற்குக் குத்த வேண்டும். கவர்னர் அனுப்புகின்ற கடிதமாக இருந்தாலும், நாம் அனுப்புகிற கடிதமானாலும் தபாலாபீஸ் முத்திரை குத்தியே யாக வேண்டும்.

பரமேசுவரன் சிதாகாச ஸ்வரூபி. அவன் கண்களிலிருந்து ஆறு பொறிகள் எழுந்தமையால் ஆகாசத்தின் சம்பந்தம்

174