பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

அதைப்போலவே மரணம் என்பது எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாததாலே, அதிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு முன்னாலேயே இறைவனை வாழ்த்தத் தொடங்க வேண்டும். எப்போதுமே இந்தக் கவசத்தை அணிந்து கொண்டால் யமன் எப்போது வந்தாலும் பயம் இல்லை.

ஆகவே மீட்டும் பிறவாத நிலை தந்து நம்மை எல்லாம் ஆட் கொள்ளுகிற இறைவனைப் பாட வேண்டும். அவன் ஒருவன் தான் உண்மையான புகழுக்கு உரியவன். அந்தப் புகழுக்கு உரியவனாக இருப்பது மாத்திரம் அல்ல. புகழ்வதற்குரிய நாக்கைத் தந்தவனும் அவன்தான். நம் கடமை, நாக்கைத் தந்தவனைப் புகழ்வது என்பது மட்டும் அன்று; புகழ்வதனால் மேலும் நமக்குப் பயன் உண்டு. அவனைப் புகழ்ந்தால் காலனை வெற்றி கொள்ளலாம்.


   ......எரி மூண்டதென்ன
   விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன்.
கூற்றன் மிகவும் சீற்றத்தோடு வருகிறான். அவன் கண்களில் அனல் கொப்புளிக்கிறது. புகை எழுகிறது. முகம் கோபத்தால் சிவந்திருக்கிறது. அவன் தன் பாசக் கயிற்றைப் போட்டு, நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனது கொடுமையான பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அயில்வேலன் கவியைப் பாட வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்து அவன் கவியைக் கற்றுக் கொள்ளாதிருக்கிறீர்களே; மரணம் உண்டாகும் சமயத்தில் எப்படி உங்களுக்குப் பாட வரும்?' என்பது அருணை முனிவர் கேள்வி.

"பேச்சு என்ற பெரு வரம் பெற்ற மக்கள் நாம். ஆதலால் நல்ல பேச்சைப் பேசுங்கள். முருகன் பேச்சைப் பேசுங்கள். அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ளுங்கள். அன்பால் எழுத்துப் பிழையறக் கற்றுக் கொள்ளுங்கள். கூற்றன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும்போது அந்தக் கவி வந்து உதவும். அந்தச் சமயத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் நிச்சயமாக அப்போது கற்றுக் கொள்ள முடியாது" என்று இதனால் தெரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்கிறார் அவர்.

101