பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

என்று வள்ளுவர் சொல்கிறார். செருக்கை அறுப்பதற்கு நிலைக் களமாக இருக்கும் இடம் இவ்வுலகம். உலகத்திற்கு வருகிறவர்கள் செருக்கைப் போக்கிக் கொள்ளலாம்; செருக்கைப் பெருக்கியும் கொள்ளலாம். ஆற்றுக்குப் போகிறவன் தன் உடம்பிலுள்ள அழுக்கை நீரிலே கழுவிக் கொள்ளலாம்; அங்கு இருக்கிற சேற்றை உடலிலே பூசிக் கொள்ளவும் கொள்ளலாம். அதைப்போல இந்த உலகத்திற்கு வருகிறவர்கள் தம் பொறிகளின் வழியே சென்று சிற்றின்பத்தையே தேடி அலைந்து அநுபவித்து அதைப் பிறர் அடையாமல் காவல் காக்கிறார்கள். ஆனால் சிலர் பொறிகளின் பிடிப்பிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதற்கான வழி வகைகளைச் செய்து கொள்கிறார்கள். இதே இடத்தில் அவர்களோடு கூடவே வாழ்கின்ற மக்கள் பலர் 'பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைப்' பெண்ணைப் போல இருக்கிறார்கள். தினை சாப்பிடுபவர்கள் சிற்றின்பம் தேடி நிற்பவர்களைப் போன்றவர்கள்; நெல்லஞ்சோறு சாப்பிடுகிறவர்கள் பேரின்பம் நாடி நிற்பவர்களைப் போன்றவர்கள். இந்தக் கருத்தை வள்ளியம்மை வரலாற்றிலேயே காண்கிறோம். அது மட்டுமல்ல. இந்த நாட்டில் புத்தகத்தில் வராமல் இருக்கிற நாடோடிப் பாடலிலும் இந்தக் கருத்தைக் காணலாம்.

ஒரு பரதேசி பாடிக் கொண்டு போகிறான். தெருவிலே பிச்சை கேட்டுப் போகிற அவன், நமக்கு ஞான நூற் கருத்தைப் பிச்சையிட்டுக் கொண்டே போகிறான்.

"நேற்றுக் கொடுத்த பணம் - முருகா
நெல்லுக்குச் செல்லவில்லை-அதை
மாற்றித் தாருங்காணும் - திருத்தணி
மலையில் வேலவனே"

என்பது ஒரு பாட்டு. நாடோடிப் பாடல்களில் அந்த அந்த நாட்டின் வாசனை அடிக்கும். இறைவனோடு ஒட்டியிருக்கிற தத்துவ வாசனை நிரம்பிய நாடு இது; ஆதலால், அந்தப் பரதேசியின் பாடலிலும் தத்துவ வாசனை கமழ்கிறது. அந்தப் பாட்டைச் சற்று ஊடுருவிப் பார்க்கலாம்.

ரேஷன் காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவனுக்கு ரேஷன் அதிகாரி பர்மிட்' கொடுத்திருந்தார். அது காசைப்

197