பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

வெறுப்பு வரும்; அதனால் கோபம் வரும்; கோபத்தினால் பகை உண்டாகும்; பகையினால் ஹிம்ஸை முளைக்கிறது; பல கொலைகள் நிகழ்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பது எது? அவா ஆசை. தனி மனிதன் ஆனாலும் பேரரசு ஆனாலும் தன் வாழ்வுக்கு மற்றொருவன் போட்டியாக வருகிறானே என்ற எண்ணமும் அதனால் பகையும் உண்டாவது இயல்பு.

தினை காத்தல்

னக்கும், தனக்கு உரியவர்களுக்கும் உணவானது தினை என்பதனால் வள்ளிக்கு அதைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஆதலால் அவள் ஆலோலம் பாடிக் கொண்டு தினைக் கொல்லையைக் காவல் புரிகிறாள். அவள் பாட்டு நமக்கு இனிமையாக இருக்கிறது என்றாலும், கிளியும், குருவியும் அவள் பாட்டையா கேட்கின்றன? அவள் விடுகின்ற கல்லால் அடிபடுகின்றன; துன்புறுகின்றன. அவளைப் பேதை என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. உண்மையில் அவள் குறச் சாதியைச் சேர்ந்தவள் அல்ல. அவள் திருமாலினுடைய மகள்; முருகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டிய உரிமை உடையவள். அவள் குற மக்களுக்கு மத்தியிலே வந்து வளர்கிறாள்; தான் யார் என்பதை அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆன்மா இறைவனோடு ஒட்டி வாழ வேண்டியது. ஆனால் அது உலகத்திலே பிறந்து, அறியாமையில் சிக்கி, பாசத்திற் கட்டுப்பட்டு, சிற்றேனல் காக்கின்ற பேதைப் பெண் வள்ளியைப் போல் சிற்றின்பத்துக்காக முயன்று அதை நுகர்ந்து கொண்டிருக்கிறது. சிறையில் அகப்பட்ட கைதி, அதனையே தன் வீடாகக் கருதிச் சிறையில் உள்ள மற்றக் கைதிகளோடு உறவு கொண்டாடி வாழ்ந்து வருவதைப் போல, இந்த உலகமாகிய சிறையில் அடைக்கப்பட்ட உயிர்கள் தம்மைப் போலவே இந்தச் சிறையாகிய உலகத்திற்கு வருகின்ற மற்ற உயிர்களோடு உறவு முறை கொண்டாடி வாழ்கின்றன. தம்முடைய சொந்த வீடு எது என்பதை உணராமல் இருக்கின்றன. தினைப் புனத்தில் வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

199