பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்யாண விளையாட்டு

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு சாதியிலும் கல்யாண சம்பிரதாயங்களும் சடங்குகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். பழங்கால மக்கள் எந்தச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள் என்பதை இலக்கியம் எடுத்துரைக்கிறது. அங்கங்கே நாகரிக மக்களுக்கும் புறம்பாகக் காடுகளிலும் நாடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களிடத்தும் அந்தப் பழைய வழக்கங்களிலே சிலவற்றைப பார்க்கலாம்.

பழைய வழக்கங்களே இலக்கியங்களில் காண்பதோடு பழமொழிகளிலும் விளையாட்டுக்களிலும் காணலாம். நாட்டு நடப்பில் இருந்த செயல்களைக் குழந்தைகள் அபிநயித்து விளையாடுவது இயல்பு. அகமுடையான் பெண்டாட்டி விளையாட்டு, கல்யாண விளையாட்டு முதலியவற்றில் வயசான மக்களுடைய பழக்க வழக்கங்களையே, குழந்தைகளும் நடித்துப் பார்க்கின்றன. அந்த விளையாடல்களுக்கு ஏற்ற பாடல்கள் வேறு உள்ளன. அவைகளும் அந்த வழக்கங்களைப் புலப்படுத்துவனவாக இருக்கும். பாட்டும் விளையாட்டும் பழைய காலமுதல் விசேஷ மாறுதலைப் பெறாமல் இருக்க, வாழ்க்கையில் மாத்திரம் அந்தச் சம்பிரதாயங்கள் மாறிப் போவதுண்டு. அந்தப் பாடல்களையும் விளையாட்டையும் கொண்டு பண்டைக் காலத்து வழக்கங்களை ஊகித்து உணரலாம். மனித இன ஆராய்ச்சி நூல்வல்லார் (Anthropologists) அவற்றைக் கொண்டுஆராய்ந்துபல செய்திகளை வெளிப்படுத்துகிறார்கள்.