பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

7


ஏமாற்றமளித்தன. இதயத்தில் வேதனை அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. அலைகடல்போல மனம் தத்தளித்துத் தடுமாறியது.

எப்பொழுது பார்த்தாலும் மீனாட்சி மிக மனக் கவலையுடனேயே வாழ்ந்து வந்தாள். தருமலிங்கத்திற்கோ, தன் மனைவிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியாமல், தவித்தவாறு வாழ்ந்து வந்தார்.

மனம் வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி, அம்பிகைக் கோயிலுக்குச் சென்று, மனம் உருக வேண்டிக் கொள்வாள், கடவுளின் சன்னிதானத்திலே தன் குறையைக் கூறிக்கொள்ளும்பொழுது, கண்ணீர் பெருகிவழியும், அப்பொழுது மனம் கொஞ்சம் சாந்தியடைவது போல் தோன்றும் அதனால் அம்பிகைக் கோயிலுக்கு அடிக்கடி போகத் தொடங்கினாள் மீனாட்சி.

மனிதர்களால் தன் குறையைத் தீர்க்க முடியாது என்ற ஒரு முடிவுக்கும் வந்து விட்டாள் மீனாட்சி, கடவுள் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை ஆலமரம்போல, அவள் மனதில் பல்கிப் பரவத் தொடங்கியது.