பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

9


வழக்கம் போல, அன்றும் கோயிலுக்குப் போயிருந்தாள் மீனாட்சி, அன்பினால் நெகிழ, நம்பிக்கையுடன் அம்பிகையைத் தொழுதாள்.

“தாயே! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னை இவ்வாறு சோதிக்கிறாய்?

மகப்பேறு இல்லாத மலடி என்று மற்றவர்கள் ஏசுவதற்காகவா என்னைப் படைத்தாய் ? எத்தனையோ வசதியைக் கொடுத்தாய்! எல்லையில்லாத இன்பம் பெறுக என்று செல்வமான வாழ்வினை அளித்தாய் இதில் மட்டும் ஏன் குறை வைத்தாய்?”

அம்பிகையே! பழியோடு என்னை வாழவைக்காதே! உன் பாதார விந்தங்களில் என்னை எடுத்துக் கொள்வதானால் கூட, நான் நிம்மதியாக வருவேன். என் கணவன் மனங்குளிர, எங்கள் பெயர் சொல்ல, ஒரு குழந்தையைக் கொடு தாயே!

தாயே! எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், உனக்கு வைரத்தோடு செய்து போட்டு, வான வேடிக்கையுடன், இதுவரை இந்த வட்டாரத்திலேயே இல்லாத அளவுக்குப் பெரிய விழாவே எடுக்கிறேன்!