பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


குரு என்றால் மலம் என்றும் ஒரு பொருள். குரு என்றால் நீக்குபவர் என்று பொருள்.

குரு என்றால் சித்தியைக் கொடுப்பவர் என்றும், குரு என்றால் பாவத்தைத் தீர்ப்பவர் என்றும் கூறுவர். இப்படிக் குருமார்கள் எல்லோரையும், இறைவனுக்கு நிகராக வைத்துப் போற்றுகிற பழக்கம் நமது தமிழ் மரபாக இருக்கிறது. இப்படி அமைகிற குருமார்களைப் பலவிதமாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

சாதாரண சீடர்க்கு குருவாக இருப்பவர் சுபகுரு என்றும், சுபகுருவிற்கு வழிகாட்டுபவரைப் பரமகுரு என்றும், பரமகுருவின் குருவாக அமைபவர், பரமேஸ்டிகுரு என்றும் அழைக்கப்படுகிறார்கள். குருவைப் பற்றிய இலக்கணத்தை இப்படித் தெளிவாகக் கூறுவார்கள். தன்னை நம்பி வருகிற சீடர்களுக்குத் தெளிவான ஞானத்தை ஊட்டுகிறவர்கள் குருமார்கள்.

முன்னேற முடியாதவர்களுக்கு முன்னேற்றத்தைக் காட்டுகிறார்கள். முடிவற்ற மெய்யுணர்வை, அளிப்பவர்களாக குருமார்கள் திகழ்வதால்தான் திருமூலர் இப்படிப் பாடுகிறார்.

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.”

- திருமந்திரம் (83)

☐☐☐