பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


அள்ளித்தருகின்ற அமுத சுரபி, கை நிறைய அள்ளித்தரும் கற்பகத்தரு.

அந்த அற்புதமான பேச்சைத்தான் ‘வார்த்தை’ என்றார்கள்.

அகத்திலே சுகமாகத் தோன்றி, நீராக ஒழுகி, நினைவாகப் பெருகி, ஒலியாக வருகிற அந்தப் பேச்சுதான், சிந்தையிலிருந்து ஊறிக் கசிந்து பேச்சாகப் பீறிட்டு வருகிறது. அந்தப் பேச்சின்பத்தை வைத்துக் கொண்டு தான் நமது மனிதகுல வாரிசுகள் மெய் மறந்து அலைகின்றன. நிலை மறந்து ஆடுகின்றன. தலைக்கனம் தாங்காமல் தள்ளாடிக் கொண்டு திரிகின்றன.

ஏன் இந்த நிலை மாற்றம்? ஏன் அந்தத் தடுமாற்றம்? அவர்கள் வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகளில் தரம் இல்லை. உரம் இல்லை. தகுதியும், திறமுமில்லை.

வாயிலிருந்து வருகிற வார்த்தைகள்தான் வாழ்க்கையை வடிவமைக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உண்மையாகவே உணர்ந்து இருந்தார்கள்.

வார்த்தைகள்தான் வாழ்க்கையை வளமாக்குகிறது என்கிற அனுபவங்களை அறிவுபூர்வமாக அறிந்து இருந்தார்கள். அதனால்தான் வார்த்தைதான் வாழ்க்கை. வாழ்க்கைதான் வார்த்தை என்ற ஒரு முழுமையான முடிவுக்கும் வந்திருந்தார்கள்.

இந்த முடிந்த முடிவினைத் தங்கள் சந்ததியார்களுக்கு நேரடியாகச் சொல்ல விரும்பினார்கள். சொல்ல விரும்பியதை வெளிப்படையாகச் சொல்லலாமா?