பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டு மென்று இலக்கணம் வகுத்துத் தந்த இந்தச் சொல்லின் இலக்கிய நயத்தை இப்பொழுது முழுமையாக அறிவோம்.

ஒரு மனிதன் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், தன் உடல் அமைப்பும், நிரம்பிய உளச்சிறப்பும் குறையாது, அழகானவனாகவும், காண்பதற்குக் கவர்ச்சியான வனாகவும், எல்லோரிடத்திலும் நல்ல உறவினனாகவும், நித்தமும் நிலை பெற்ற இந்தச் சத்துவக் குணங்களோடு வாழ வேண்டும்.

அதற்கு அவனுக்கு உதவுவது அவனது ஆத்மா. அதனாலே தான் மனிதன் என்ற சொல்லில் ‘தன்’ என்ற சொல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவனுக்கு ஆத்மாவாகிய ‘தன்’ இருந்தால்தான், அவன் மனிதன் என்று அழைக்கப்படுவான்.

அந்தத் ‘தன்’ இல்லாவிட்டால் அவன் ஜீவன் இல்லாத சவம்.

இந்தி மொழியிலே மனிதனை ‘ஆத்மி’ என்று அழைப்பார்கள். ஏன் என்றால் ஆத்மா உள்ளவன் ஆத்மி. அந்த ஆத்மாவை மிக வலிமையாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் மனிதனுக்குத்தான், ‘மகாத்மா’ என்று பெயர்.

அதனாலேதான் திருமூலரும் ‘தன்’ என்னும் ஆத்மாவை அறிய வேண்டும் என்று வற்புறுத்தினார். ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்று பாடினார்.