பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வினை அல்லவா அது?...இருவர் மனம் ஒட்டினாற்போல, இருவர் ஜாதகக் குறிப்புக்களும் ஒட்டி வரவில்லை.

பார்வதியைக் கொண்டவன் பெயர் சுந்தரம்.


புதுக்கோட்டை―அறந்தாங்கி பஸ் விடுத்துச் சென்ற கர்ணகடூரமான சத்தத்தை ‘சத்தம்’ கொடுக்காமல் வாங்கிக்கொண்டு பார்வதி தன் வீட்டை―அதாவது, வாடகை வீட்டை மிதித்த போழ்திலே, பேபியின் அழுகைச் சத்தம் காதுகளில் வழிந்து, இதயத்தைத் தொட்டுக் குலுக்கிவிட்டது. துரிதம் கூட்டி கடந்தாள்; “அத்தான்!...”

சுந்தரம் குணதிசை நோக்கித் திரும்பிப் படுத்தப்படி, எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

பார்வதி குழவியை எடுத்தாள்: பாலமுதம் உண்டது பேபி. மார்பகச் சேலையைச் செம்மைசெய்து விட்டு அவள் தன் கணவன் பக்கம் நாடி நடந்தாள். அவன் அசையக் காணோம்! அண்டிச் சென்றாள். ஏதோ ஒரு கடிதம். ‘ஒரத்த நாட்டிலேருந்து மாமா எழுதியிருப்பாங்க, ஷேம லாபம் கேட்டு!’

வடித்து வைத்துச் சென்ற சோறு சூடு மாறாமல், நல்ல பதத்துடன் இருந்தது. குண்டானில் சோற்றைக் கொட்டினாள். சூடு பறந்தது. தட்டு முதலிய உபகரணங்களோடு ‘நடை’க்கு நடை பயின்றாள். காலில் ஏதோ தடுக்கினாற் போலிருந்தது. நகக்கண்ணில் பட்டது, கெட்ட வலி. குனிந்த பார்வையை ஓட்டினாள். வலி ஓட வில்லை. ‘ஒட்டிக்கு ரெட்டி’ ஆனது!

அது ஓர் ஊன்றுகோல் கைப்பிடிக் கழி!

பார்வதியின் கண்கள் இருண்டன. இருளில் புனல் வழிந்தது.