பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

91



மனதிலே நினைவுகள் மாறுபட்ட, பங்கப்பட்டுப் போகிறபோது, சுவாசமும் மாறுபடுவதால், இரத்த ஒட்டமும் மாறுபட்டு அதனாலே சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதயத்தின் தடுமாற்றம், செல்களுக்குக் கிடைக்காத சுத்த இரத்தம். அசுத்தங்களால் அழிந்து போகிற செல்கள். இவைகள் எல்லாம் உடம்பை வக்கிரமாக்கி விடுகின்றன. அதனால்தான் மனம் போல மகிழ்ச்சியான வாழ்வு என்றார்கள்.

சுவாசம் சீராக இருக்கின்ற பொழுது அவன் உடல் அம்சமாக விளங்குகிறது. அதனால் அவனது முகம் பொலிவோடும், தெளிவோடும் பிரகாசிக்கிறது. அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே மற்றவர்கள் அவனைப் பணிய வேண்டும், வணங்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அவன் உடல் அளவோடும், திட்டமோடுட அழகாக இருக்கும். அதன் காரணமாக அவன் அணிகின்ற ஆடைகளே அவனுக்கு மேலும் அழகு சேர்க்கும். இப்படி உடம்பை வைத்திருப்பதினால்தான் "ஆள் பாதி, ஆடை பாதி' என்றார்கள்.

ஒரு சில ஆண்களுக்கு, பெண்களுக்கு விலை உயர்ந்த அலங்காரமான ஆடைகளை அணிவித்தாலும், அவர்கள் உடம்போடு அந்த ஆடை ஒட்டுவதில்லை. ஆனால், திட்டமாகத் தேகத்தை வைத்திருக்கின்ற ஒரு ஆணோ, பெண்னோ சர்வ சாதாரணமான ஆடைகளை அணிந்திருந்தால் கூடக் காண்பதற்கு கவர்ச்சியாகத் தெரியும்.