பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


சாவித்திரி துள்ளிக் குதித்தாள். ‘ஆமா; இப்போ நெனப்பு வந்துடுத்து, மாலதி!’ என்றாள் அவள். பள்ளி வாழ்வு என்னும் பசுமைப்புல் தரையில் பணம் என்னும் மெருகு பொலிவு காட்டித் திகழ்ந்த மாலதியை எண்ணினாள்; ரங்கூனில் மர வியாபாரம் செய்து வீடு திரும்பிய மாலதியின் தந்தை செய்த ராஜோபசாரத்தை சாவித்திரியால் மறக்க முடியாது. கிழக்கத்திக் காளை பூட்டிய கூண்டு வண்டியில் தினமும் பள்ளிக்கு வந்து போகும் அவளது பழக்கத்தையும் வேளைக்கு ஓர் அலங்காரம், காளைக்கு ஓர் ஆடை என்று தோன்றிய அவளுடைய ஆடம்பரத்தையும் நினைவுக்கு கொணர்ந்தாள் சாவித்திரி, அவள் விழிகள் மாலதியைக் கூர்ந்து நோக்கின. கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலி, கைகளில் மின்னிய தங்கவளையல்கள், மோதிரங்கள், ’லோலாக்குகள் ஆகியவற்றையும் பார்த்தாள் அவள்.

‘அப்பா செளக்யமா, மாலதி! அவர் எங்கே இருக்கார்? ரங்கூனில் தானா? நீ எத்தனை நாளாகப் பட்டணத்தில்இருக்கே?’

‘இப்போது அப்பா இங்கேதான் இருக்கார்; செளக்யமாகவே இருக்கார்; மயிலாப்பூரில் இருக்கிறோம்; ஸில்க் எம்போரியம் வைத்திருக்கார்; கார் ஸெர்வீசுக்குப் போயிருக்கு; இங்கே என் சிநேகிதி ஒருத்தியைப் பார்க்க வந்தேன்!” என்று பதில் சொன்னாள் மாலதி.

“உனக்குக் கல்யாணம்...!”

‘ஆகிவிட்டது’ என்றாள் மாலதி.

இருவரும் தத்தம் கல்யாணங்களுக்கு அழைப்புக்களைப் பரிமாறிக்கொள்ள மறந்துபோன குற்றத்துக்குப் பரிகாரம் தேடனார்கள்.