பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


தான். மற்றபடி, கந்தப்பன் அந்தப் பங்களாவின் ஒரு நபராகவே மாறிவிட்டான்.

ஒருநாள், மதுரைக்குச் சரக்குப் போட்டு வரத் திட்டமிட்டு விடியற்காலை வண்டிக்குப் புறப்பட எண்ணித் துணிமணிகளுடன் ஐந்நூறு ரூபாய் மட்டும் பிரயாணப் பையில் எடுத்து வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டார் ராமலிங்கம். ஆபத்துச் சம்பத்துக்கெனக் கைச்செலவுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமான தொகை அது. சரக்குக் கொள்முதல் ஆயிரக் கணக்கில் நடைபெறும். அது கடன். சரக்கு இவருடைய கடைக்கு வந்த கையோடு உரிய பணம் உரிமைக்காரருக்குச் சேர்ந்து விடும். வியாபார ஒப்பந்தத்தின் மாமூல் நடப்பு இது!

கந்தப்பன் கொடுத்த சூடான பாலைக்குடித்துவிட்டுப் படுத்தவர் மீண்டும் அலாரத்தின் ஒலி கேட்டு விழித்தார். காருக்குப் புறப்பட்ட நேரத்தில், பையைப் பிரித்துப் பணத்தை எண்ணியபோது, அவரது இரத்தம் கொதித்தது. உடனே "கந்தப்பா டேய், கந்தப்பா!" என்று கூச்சல் போட்டார் செட்டியார், கந்தப்பனைத் தேடிப் பார்த்தார். அவன் அங்கு காணப்படவில்லை. "கடவுளே! இந்தப் பயல் கந்தப்பன் நூறு ரூபாயைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டானே!" என்று முணுமுணுத்தார். கடைசியில் அவரது படுக்கைத் தலையணைக்கு அடியில் ஒரு கடிதம் இருக்கக் கண்டார்.

“முதலாளி அவர்களுக்கு, உங்களுடைய பணத்தில் நூறு ரூபாயை மட்டுமே எடுத்துப் போகிறேன் நான். இந்தப் பணத்தை உங்களிடம் மறுபடியும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். இது நிச்சயம்.

இப்படிக்கு
கந்தப்பன்