பக்கம்:உயிரில் கலந்தது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

வாய்ப்புக்காகக் காத்திருந்தார். ஸ்ரீமான் கோதண்டபாணி என்று பொதுப்படையாகக் குறித்திருந்தது அவருக்கு வேற்றுமையாகப்பட்டது.

வாணியின் டைரியை எடுப்பதற்காக, எழுந்து பீரோவை நாடி நடந்தார். வாணியின் டைரியைக் காணோம். அதற்குப் பதிலாக, வேறொரு டைரி தென்பட்டது.

ஏதோ ஒரு பக்கம் காற்றில் பறந்தது. மனப்புரவியும் பறந்தது.

குதிரைக்குக் கடிவாளம் உண்டு; மனத்திற்கு ஏது?

கறுப்புக் கொள்கையில் ‘நட்டுக்கெட்டுத் தடுமாறி, நின்ற சமயத்தில், பெற்றவரின் தாய்நாட்டுப் பாசத்தையும், அன்னையின் பெற்ற பாசத்தையும் மதிக்காமல், கெட்டும் பட்டணம் சேர்’ என்ற முன்மொழியைத் தொடர்ந்து சென்னை வந்தடைந்து, கடைசியில் அமைச்சூர் நாடகக் குழு ஒன்றிற்காகக் கதை வசனம் பாடல் எழுதிக் கொடுத்த நாட்களிலே, நாயகியாக நடித்தவளின் நாயகனாக ‘வாழ்ந்து கெட்ட’ சில நாட்களின் அவலப் பிழைப்பை அவர் இத்துணை நாட்களாக மறந்துதான் போனார். ஆனால் அவற்றை மறைக்க ஒப்பவில்லை! அந்த நாடகக்காரி நிரஜாவை விரட்டிவிட்டு இப்பொழுதும் வாணிதான் அவரது உள்ளத்து மேடையில் தோன்றினாள். மீண்டும் அவர் மனம் அடித்துக் கொண்டது. ‘நான் என் வாணிக்குத் துரோகம் செய்துவிட்டேனா? இல்லை, இல்லவே இல்லை! நான் புது வழியில் திரும்பி எத்தனையோ வருஷங்கள் உருண்டு விட்டனவே...’ அதே நிமிஷத்தில் தம்மையும் அந் நடிகையையும் பிணைத்து ‘கன்னா பின்னா’ வென்று எழுதித் தீர்த்த ‘மஞ்சல் பத்திரிகை’யையும் அவர் நினைத்துக்கொள்ள வேண்டியவரானார். மேற்படி மஞ்சள் பத்திரிகைகாரர்களை நேரில் சென்று வ்ம்புக்கு இழுத்துத் திட்டிவிட்டு வந்த தீரத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகக்கூடி, அவை எல்லாம் சேர்ந்து அவரைக் குடைந்தெடுத்தன. வெட்கம் பிடுங்கித் தின்றது. ரத்தக் கண்ணீர் சுரந்தோடியது.