பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


இருந்தாலும், இப்படிப்பட்டவர்களால் விளையாட்டை இதுவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லோருமே இடம் மாறி, தடம் மாறி, தரம் மாறி, தாழ்ந்து வீழ்ந்து போனவர்களாகி விட்டார்கள்.

விளையாட்டை விரும்பாத மக்கள் எல்லாம் தலமாக வாழவில்லையா என்று எதிர்வினா எழுப்புவாரும் உண்டு.

ஒன்றுமே செய்யாதவர்கள் உருப்படியாக வாழ்கின்றார்கள் என்றால், உடலை இயக்கி உற்சாகப்படுத்தி வாழ்பவர்கள் எவ்வளவு நலமாக வாழ்வார்கள்? அவர்கள் நலமும் பலமும் பெற்று, நாளெல்லாம் 'ராஜ வாழ்வு' வாழ்வார்கள், வாழ்கிறார்கள் என்பது தான் நாம் கண்ட அனுபவமாகும்.

ஏனெனில், விளையாட்டின் இயல்புகளும், அடிப்படை குணங்களும் அப்படித்தான் அமைந்து கிடக்கின்றன.

விளையாட்டின் இயல்புகள் :

விளையாட்டுக்கள் என்பன, மனிதர்களுக்குள்ளே இயற்கையாக அரும்பி மலர்ந்துவரும் அருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுக்கள் எப்பொழுதும் எல்லோராலும் விரும்பப்படும் இனிமை நிறைந்ததாகும்.

எந்த வயதினரும், எந்தப் பிரிவினரும், சாதிமத பேத மின்றி, ஆண் பெண் வேறு பாடின்றி, ஏழை செல்வர் என்ற ஏற்றத் தாழ்வின்றி, சமமாகப் பங்கு பெறுகின்ற அளவுக்கு எளிமை நிறைந்ததாகும்.

இத்துடன், பங்கு பெறுகின்ற எல்லோருமே கூடுதல் குறைச்சலின்றி இன்பம் கொடுக்கும் பெருமை நிறைந்ததாகும்.