பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


பிரஸ்தம். பிறகு தனியாகப் பிரிந்து தவ வாழ்க்கை மேற்கொள்வது சந்நியாசம்.

இத்தகைய நான்கு அணுகு முறைகளிலும் பொதுவான ஒரு குறிப்பை நம்மால் காணமுடிகிறது.

எந்த நிலையிலும், எத்தகைய வசதியிலும் பசித்திருத்தல், தனிமையிலிருத்தல், விழித்திருத்தல் என்பது தான் மூன்று முக்கிய பண்புகளாக நின்று வழி காட்டுகின்றது.

பசித்திருத்தல் என்பது அளவோடு உண்டல், போதிய அளவு உண்டல், அதாவது பெருந்தீனி தின்று, மூச்சு விடக் கூட முடியாமல், இரை விழுங்கிய மலைப்பாம்பு நெளிவதைப் போல் வாழாமல், சுறுசுறுப்பாக இயங்குமாறு உணவு உண்ணுதல்.

அதிகமாக, அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை ஜீரணம் செய்யவே இரத்த ஓட்டத்தின் பெரும் பகுதி சரியாய் போய்விடுகிறது. இதனால் மற்ற இடங்களுக்கு, முக்கியமாக சிந்தனை செய்யும் மூளைப்பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் செல்லாமல் திசை மாறிப் போவதால்தான், 'வயிறு முட்ட சாப்பிடுபவர்கள் வடிகட்டின முட்டாள்களாய் வாழ்கின்றார்கள் என்ற தன்மைக்கு ஆளாகிப் போகின்றார்கள்.

சிறந்த சிந்தனை, சுறுசுறுப்பான செயல்களுக்குப் பசித்திருத்தல் ஒரு ஒப்பற்ற காரணமாக அமைந்து விடுகிறது.

கூட்டமாய் இருக்கும்பொழுதுதான் மிருகங்கள் கொடுமையற்று இருக்கின்றன. உதாரணமாக, கூட்டமாக யானைகள் நடமாடும் பொழுது, அங்கு செல்கின்ற மனிதர்களுக்கு ஆபத்து அதிகமில்லை. ஆனால், தனியாக ஒரு யானை வந்துவிட்டால், எதிர்ப்படும் ஆளின் கதியும் அதோகதி தான்.