பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

நாடுகளிலே ஆபத்துக்களை உருவாக்கும் இடிகளாகவும் மின்னல்களாகவும் மின்னி மின்னி இடியிடித்துக்கொண்டு மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த காலம். அதனால், ஐன்ஸ்டைன், அன்றைய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார். அதன் எதிரொலி என்ன தெரியுமா? அணுகுண்டு அண்டர் கிரவுண்டில், அதாவது ரகசியமாக, எவரும் அறியா கட்டுப்பாட்டில் தயார் செய்யப்பட்டது.

இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற பின்பு, வல்லரசு நாடான அமெரிக்கா, இந்த அணுகுண்டைத்தான் 1945-ஆம் ஆண்டு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா என்ற இடத்தில் வெடித்தது. உலகமே, உயிரைப் பிடித்துக்கொண்டு உலுங்கியது. மக்கள் நெஞ்சிலே பயங்கரம் என்ற தீ பற்றிக்கொண்டது. அதனால், அவனியே ஆபத்துக்களிடையே தத்தளித்துக் கொண்டிருந்தது எனலாம்.

அணுகுண்டு வெடித்த பின்பு, அதனால் ஏற்பட்ட அழிவுச் சக்திகளைக் கேட்டும், பார்த்தும் ஐன்ஸ்டைன் அதிர்ந்து வெலவெலத்தார்! திகைத்தார்! திணறினார்! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பற்றிக்கொண்டோமே என்று நிம்மதியற்றவராய் வேதனைக்கடலில் துரும்பானார்-பாவம்!

அணுவிலிருக்கும் ஆற்றலுக்கு இவ்வளவு பெரிய மகத்தான சக்தி உண்டா? ஒரு குண்டுக்கே இந்த உலகம் ஆடிப்போய் விட்டது என்றால், இந்த அணுகுண்டு தத்துவம் நாட்டுக்கு நாடு பரவி, ஒவ்வொரு நாட்டையும் உருக்குலைக்கும் சக்தியானால், மக்கள் கதி என்ன? உலக இயற்கைச் சக்தியின் நிலை என்ன? என்பதை எல்லாம் எண்ணி மனம் மருகினார்! வேதனையால் நெஞ்சம் வெந்தார்.

ஆனால், அழிவுக்கு மட்டும் அல்ல; ஆக்கப் பணிகளுக்கும் அணுசக்தி பயனாகும் என்று கண்டறிந்த பின்னர்-