பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின.

மேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையுமே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சி யையும், முதிர்ச்சியையும் காட்டின.

நிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ள சென்றபோது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக்கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியிருந்தது. சிக்கென்று இறுகித் திரண்டு செழித்த வளமான தோள்களும் உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின, பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். “ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு. இந்த, அபூர்வமான கலையைப் பரப்பணும்...”

“அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என். அளவில் நான் நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான்.