பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சாயங்கால மேகங்கள்

யார் உடன் நிற்கலாம், யார் உடன் நிற்கக் கூடாது என்பதை எல்லாம் பற்றித் திடீரென்று தனக்கு ஏன் இவ்வளவு அக்கறை உண்டாயிற்று என்று எண்ணிய போது பூமிநாதனுக்கே வியப்பு ஏற்பட்டது. தனக்குத் தானே அவளிடம் கொண்டாடிக் கொள்ளும் இந்த உரிமைக்கு என்ன காரணம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான் அவன்,

ஓர் அழகிய சுறுசுறுப்புள்ள நளினம் நிறைந்த இளம் பெண்ணின் மேல் அவளுடைய சம்மதமும் அங்கீகாரமும் இன்றியே ஓர் ஆணுக்கு இப்படி ஏற்படும் பற்றும் உரிமைகளும் மிகவும் இங்கிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இந்த விதமாக ஓர் ஆணின் மேல் பெண்ணோ, பெண்ணின் மேல் ஆணோ எடுத்துக் கொள்ளும் அக்கறைகளும், உரிமைகளும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரே விதமாக அர்த்தப்படுவதுதான் இதுவரை உலக வழக்கமாக இருந்திருக்கிறது.

அங்கே திரு.வி.க. லெண்டிங் லைப்ரரி முகப்பில் சித்ரா வையும் இன்னேர் இளைஞனையும் சேர்த்துப் பார்த்த திகைப்பில் திளைத்திருந்த பூமிநாதன், பின்புறமிருந்து நண்பன் பரமசிவத்தின் குரலைக் கேட்டுத் திரும்பினான்.

“என்ன பூமி இங்கே இப்படி நடுத் தெருவிலே நின்று கொண்டு?”

“உன்னைத்தான் தேடி வந்தேன். நீ கடையில் இல்லை. காபி குடிக்கப் போனதாக உன் தம்பி முருகேன் சொன்னான்.”

“வா! கடைக்குப் போகலாம்”-பூமியையும் உடனழைத்துக் கொண்டு பரமசிவம் கடையை நோக்கி நடந்தான். தனது புத்தகம் வழங்கு நிலையத்தை அவன் கடை என்றே வழக்கமாக குறிப்பிட்டு வந்தான்.

அவர்கள் இருவரும் கடையை அடைவதற்குள் சித்ராவும் அவளோடு உடனிருந்த இளைஞனும் வேலை முடிந்து வடபுறமாகத் திரும்பி பாலாஜி நகருக்குள்ளே புகுந்திருந்தார்கள்.