பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சாயங்கால மேகங்கள்

விட்டுச் சென்ற பையைத் திரும்பக் கொடுப்பதற்காகச் சென்று சந்தித்த சந்திப்பும் அவன் உள்ளத்தில் கிளர்ச்சியையும் மலர்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கி யிருந்தன.

காலை வேளையில் மைலாப்பூர்க் குளக்கரையிலிருந்து பாண்டி பஜாரில் வந்திறங்கிய முதல் சவாரி இப்படிக் கைப்பையை ஆட்டோவில் விட்டு விட்டுப் போனது, அவன் வடபழநி கோயில்வரை காலியாகச் சென்று அங்கே மற்றொரு சவாரியை ஏற்றிக் கொண்ட போதுதான் தெரிய வந்தது.

கோயிலிலிருந்து வெளியே வந்து “நுங்கம்பாக்கம் அவென்யூ ரோடு போகணும்”....என்று ஏறியவர், “இதென்னப்பா...லேடிஸ் ஹேண்ட் பாக் கிடக்குது...யாராவது மறந்து விட்டுட்டுப் போய்ட்டாங்களா?” ... என்று அதை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவள் கைப்பையை விட்டு விட்டுப் போயிருப்பது முதல் முதலாக அவன் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது அப்போதுதான்.

சவாரியை அவென்யூ ரோட்டில் இறக்கி விட்டு விட்டுத் திரும்பும்போது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்தி விட்டுத் தயங்கினான். காலையில் மயிலாப்பூர் குளக்கரையில் ஏறிப் பாண்டி பஜாரில் இறங்கிவிட்ட அழகிய இளம்பெண்ணின் அடையாளங்களைச் சொல்லிப் பையைப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாமா என்று ஒருகணம் தோன்றியது.

அதன் சாதக பாதகங்களைச் சிந்தித்தான் அவன். பையை நாணயமாக ஒப்படைக்கும் தன் மேலேயே சந்தேகப்பட்டு ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள் என்பதும், பைக்கு உரியவர் தேடி வந்து கேட்டாலும் பல சிரமங்களுக்குப் பின்பே அது அவருக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதும் சுலபமாகவே அனுமானிக்கக் கூடியவையாயிருந்தன. இந்திய மக்களுக்கு வெள்ளைக்காரரிடமிருந்து சுதந்திரம் கிடைத்து விட்டாலும் போலீஸ்காரர்களிடமிருந்து. சுதந்திரம் கிடைக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும்போல் தோன்றியது. அப்பாவி-