பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சாயங்கால மேகங்கள்

எதுதான் வழக்கம் என்று. அவரிடம் திருப்பிக் கேட்டு விடலாமா என்பதாகப் பூமியின் நாக்குத் துடித்தது. கட்டுப் படுத்திக் கொண்டான்.

“இவன் என்னோடு கல்லூரியில் படித்த சிநேகிதன், புதுக்கவிதை எல்லாம் எழுதுவான், புனைப்பெயர் புரட்சிமித்திரன், சொந்தப் பெயர் நரசிம்மன். ‘தீவிரம்’ என்று ஒரு மாதப் பத்திரிகை நடத்துகிறான் என்பதாகத் தன் சிநேகிதனைப் பூமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சித்ரா.

உடனே பூமிக்குமுன் பாய்ந்து ‘நைஸ் டு மீட்யூ’ என்று சம்பிரதாயமாகக் கைகுலுக்கினான். புரட்சிமித்திரன். பூமிக்கு அவன் செயல்கள் எல்லாமே கொஞ்சம் மிகையாகப் பட்டன.

“என்ன செய்கிறீர்கள்...”

இதற்கு அவன் பதில் சொல்வதற்குள் சித்ராவே முந்திக் கொண்டு பூமிக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள். “இப்போதைக்குத் ‘தீவிரம்’ நடத்தறதும், புதுக்கவிதை எழுதறதும் இவனோட முழுநேர வேலைன்னு சொல்லணும்! ஃபாதர் பெரிய பைனான்ஷியர், ‘களக்காடு சிட்பண்ட்ஸ் ‘னு ஒரு சிட்பண்ட்ஸ் நடத்தறார். இவன் ரொம்பவும் புரொக்ரஸிவ் வியூ உள்ளவன்! சமூக அமைப்பையே தீவிரமாக மாற்றும் ஆசை உள்ளவன்.”

உடனே கைப் பையைத் திறந்து நாலைந்து ‘தீவிரம்’ இதழ்களை எடுத்துப் பூமியிடம் அவசரமாக நீட்டினான் புரட்சிமித்திரன். பூமி அவற்றை அமைதியாக வாங்கிக் கொண்டான்.

“புரட்சித் தீயை மூட்டினாலொழிய இந்தச் சமூகத்தின் தீமைகள் வெந்து தணிய வழி இல்லை.”

இதற்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தப் பத்திரிகை இதழ்களை மெல்லப் புரட்டத் தொடங்கினான் பூமி.

அதில் உள்ள பதினாறு பக்கங்களிலும் புரட்சி மித்திரனின் புதுக் கவிதைகளே நிரப்பப்பட்டிருந்தன. எல்லாக் கவிதைகளிலும் சமையலுக்குத் தாளிதம் செய்தது போல அக்னி