பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

மேளம் கொட்டினான், தாளம் போட்டான், ஒத்து ஊதினான் என்று தெரிந்து கொள்கிறோம். தலைமையான ஒரு பொருளைச் சொன்னாலே மற்றவற்றையும் கொள்வது மரபு.

"ஒருமொழி ஒழிதன் இனம்கொளற் குரித்தே"

என்பது இலக்கணச் சூத்திரம்.

உயிர்கள் திருந்தல்

ம்பெருமாட்டி உயிர்கள் எல்லாம் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களை ஈன்றாள். தனு கரண புவன போகங்கள் ஆகிய நான்கையும் உயிர்களுக்காகப் பெற்றுத் தருகிறாள். பள்ளிக் கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தைக்கு அதன் தாய் அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்து, வாழ்க்கையிலே சிறப்புற்று விளங்க வேண்டுமென்ற அன்போடு விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, தோழர்களையும் சேர்த்துவிட்டு, அது சந்தோஷமாகப் பள்ளிக் கூடம் போய்த் திருந்த வேண்டுமென்று விரும்புகிறாள். உலகத்திலுள்ள உயிர்களுக்குத் தாயாகிய எம்பெருமாட்டி, இறப்பினாலும் பிறப்பினாலும் துன்பப்படுகின்ற உயிர் பூமிக்கு வந்து இன்ப துன்பங்களைத் துய்த்து, நல்வினைகளைச் செய்து ஞானம் பெற்றுப் பிறப்பை அறுக்க வேண்டுமென்ற கருணையினால் தனு கரண புவன போகங்களைத் தருகிறாள். அகிலம் யாவையும் பெற்றவள் எம்பெருமாட்டி அவளை அகிலாண்டேசுவரி என்று அழைப்பர்.

"ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை

என்று அபிராமிபட்டர் துதிக்கிறார். உலகத்தை எல்லாம் அவள் தந்தவள்.

உலகத்தை உண்டாக்கினவள் பரமேசுவரன் அல்லவா? பரமேசுவரி படைத்ததாகச் சொல்லலாமா? என்றால் பரமேசுவரன் வேறு, பராசக்தி வேறு அல்லர். ஆண்டவனிடம் இருக்கிற அருட்சக்தி எதுவோ அதுவேதான் விரிந்து அம்பிகையாகிறது. பரப்பிரம்மமாகிய பரமசிவன் சிறிதும் ஆடாது, அசையாது இருந்தால் ஒன்றும் நடவாது. அவனது அருட்சக்தி வெளிப்பட்டு இயங்கினால்தான் யாவும் நடைபெறும்.

170