பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சாயங்கால மேகங்கள்

தடியைச் சுட்டிக் காட்டி, “பொம்புளைப்புள்ளைங்களுக்கான டே ஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாருகிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிப்பாரு, ‘குமா குரு’ ன்னு சொல்லி விசாரியுங்கள். அதுதான் அந்தப் பையனோட பேரு” என்றான்.

உடனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான்.

நயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச்சொல்லி அதற்குக் கட்டுப்படாவிட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்துவிட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்துகொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ‘எடுப்பார் கைப் பிள்ளை’ யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல்பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதம் விதமான நவ நாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத்தன்மையைக் கற்பிப்பதற்கு .நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும், டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அடிபடாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரமஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

அந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பல விதமான வக்கிரவாச்கங்கள் அச்சிட்ட. பனியன்களும் அணிந்த