பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

245

“இந்த மாதிரிப் பெண்கள் கையில் ஏற்கனவே ஓர் ஆண் பிள்ளை கஷ்டப்பட்டது மட்டும் போதாது என்கிறாய்! புதியதாய் இன்னொருவனும் மாட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டுமா என்ன?”

இதைக் கேட்டு அவள் சிரித்தாள், பூமியின் நகைச் சுவையை அவள் இரசித்தாள். உல்லாசமாக இருக்கும்போது நகைச்சுவையாகப் பேசுவதைவிடச் சிரமப்படும்போது நகைச்சுவையாகப் பேசும் பூமியின் இயல்பைப் பலமுறை தனக்குத் தானே கவனித்து வியந்திருக்கிறாள் அவள்.

சாதாரணமானவர்களால் சந்தோஷமாக இருக்கும் போது மட்டும்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும்போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரே அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை என்று ஒரு மனஇயல் விளக்க நூலில் எப்போதோ படித்திருந்தாள் சித்ரா.

அவன் முத்தக்காளின் மெஸ்ஸிலிருந்து ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்டு வெளியேறி விட்டான் என்பதில் சித்ராவுக்கு ஏற்பட்ட உள்ளார்ந்த மகிழ்ச்சி அளவிட முடியாததாயிருந்தது. யாரோ முன்னேறுவதற்காக அவன் சிரமப்படுவது இனி இல்லை என்ற உணர்வை இப்போது அவள் தீர்மானமாக அடைந்திருந்தாள்.

கட்டிப் போட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு சுதந்திரமாக வெளியே வந்துவிட்ட உணர்வுதான் அவளுக்கு இப்போது இருந்தது. மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோயிலருகே வந்ததும் பூமி அவளைக் கேட்டான்.

“நல்ல பசி! மகாபலிபுரத்திலே டில்லியிடம் இளநீர் சாப்பிட்டதுதான். மெஸ்ஸில் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று திரும்பினேன். முத்தக்காள் உள்ளே நுழையும் போதே அதில் மண்ணைப் போட்டுவிட்டாள். வா! இங்கே பக்கத்தில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிடலாம்! உனக்கும் பசிக்கும் என்று நினைக்கிறேன்.”

சா- 16