பக்கம்:அணியும் மணியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

என்று துறவிகளுக்குச் சிறந்த நீதியை உணர்த்துகின்றார். வெளித் தோற்றத்தாலும் பிறர் மெச்சும்படி நடந்து கொள்வதாலும் எந்த அறமும் சிறவாது என்பது அவர் காட்டும் நெறியாகும். வள்ளுவரைப் போலவே திருத்தக்க தேவரும் சடங்குகளால் சாதிப்பது இயலாதென்பதையும், உள்ளத் தூய்மையே உறுதியளிக்கும் என்பதையும் தெள்ளத் தெளியக் காட்டிச் செல்கின்றார்.

நீண்ட சடையும் காவி உடையும் அணிந்தும், வேள்வி செய்தும், வேதம் விளம்பியும், கடிய விரதங்களை மேற்கொண்டும் கடுமையான நெறியோடு வாழ்ந்துவந்தாலும், உள்ளத்தினின்று வேட்கையை ஒழிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் வீடுபேறு கிடைக்காது என்பதை அழகாகக் காட்டி, உயர்ந்த கருத்தை நிலைநாட்டுவதைக் காண்கிறோம். “ஓங்கிய மரத்தில் தங்கும் வாவற்பறவை தலைகீழாகத் தொங்கிக் கிடந்து, அயலிலே கிடக்கும் பழங்களைத் தின்பதால் அதற்கு வீடுபேறு கிடைக்குமா? அதுபோல நீங்களும் உறிகளில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு உணவு உண்டு வாழ்ந்தால் மட்டும் உங்கள் தீவினைகள் அகலுமா?” என்று கேட்டு, அவ்வாறு உணவு உண்ணும் வகையாலேயே உயர்வு அடைய முடியும் என்று கூற முடியாது என்றும், திண்ணிய எண்ணமும் தூய உள்ளமுமே வீடுபேறு அளிக்கும் என்றும் வற்புறுத்துகிறார்.

தூங்குறிக் கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கல வினைகளென்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்குநீண் மரத்தில் தூங்கும் ஓண்சிறை ஓடுங்கல்வாவல்
பாங்களிற் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே

- கேமசரி. 18


என்று, தக்க உவமை கொண்டு போலித் துறவால் ஞாலத்தில் வீடுபேற்றை அடைய முடியாது என்பதைத் துறவிகட்டே உணர்த்தும் அறிவுரைகளால் அமைத்துத் தம் உயர்-