பக்கம்:அணியும் மணியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

10. நாடும் மொழியும்


தெள்ளு தமிழில் தீஞ்சுவைக் கவிகள் இயற்றி நெஞ்சை அள்ளிய கவிஞர்கள் பலர். அவர்களுள் நாட்டையும் மொழியையும் ஏட்டில் பாடி நல்லுணர்வு ஊட்டிய பெருமை பாரதியாரையே சாரும். மற்றைய கவிஞர்களுக்கு இல்லாத தனிப் பெருமை இவருக்கு உண்டு. நாட்டு உணர்வும் மொழிப் பற்றும் தோன்றும் வகையில் நற்கவிதைகள் பாடி ஆற்றலும் அறிவும் ஊட்டித் தாழ்வும் தயக்கமும் போக்கி வாழ்வும் வழியும் வகுத்து மக்கட்கவிஞர் எனப் போற்றப் பெறும் வகையில் இன்று தமிழுலகம் போற்றும் தனிப்பெருங் கவிஞராக விளங்குகின்றார்.

வங்கத்தில் தாகூர் பிறந்து மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் உணர்த்தியவாறு போலவே, மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் தமிழ்நாட்டுக்குக் கவிதையால் ஊட்டியவர் பாரதியார் ஆவார். கவிஞன் பிறக்கும் சூழ்நிலையும் காலமும் அவனை ஒவ்வொரு வகையாக உருவாக்குகின்றன. ஒரே காலத்தில் நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் உண்டாக்கிய நற்கவிஞர்களாகிய பாரதியும் தாகூரும் இந் நாட்டில் தோன்றினரென்றால், காலத்தின் கரங்களும் ஞாலத்தின் சூழ்நிலையும் இத்தகைய போக்குடைய கவிஞர்களைப் படைத்தன எனலாம்.

பாரதி கவிதையுலகில் ஒரு புதுமையை உண்டாக்கியவர். எளிய தமிழில் எதையும் சொல்லி வாழ்வில் எழிலையும் எழுச்சியையும் உண்டாக்க முடியும் என்று காட்டிய புதுமையை