பக்கம்:அணியும் மணியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

விரிவுரை வேண்டுங்கொல்! அங்கத்தினரைச் சேர்க்கும் தொண்டில் உடனே தலைப்படுங்கள் தலைப்படுங்கள்”

வினாவாக்கியங்கள் எழுத்தின் தொடக்கத்தின் அமைப்பாக நிற்கின்றன.

“இத்துணைச் சிறப்பு வாய்ந்த நமது தமிழ் நாடெங்கே? தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கமெங்கே? அன்பு எங்கே? அரசு எங்கே? வீரத்தாய்மார் எங்கே? தமிழ்த்தாய் எங்கே? தமிழர்களே! உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை என்ன? உங்களுக்குள் எத்துணைப் பிளவு! எத்துணைப் பிரிவு”.

வினாவாக்கியங்களுக்கு இடைஇடையே வியப்பு வாக்கியங்கள் சேர்ப்பது அவர் இயல்பாக உள்ளது.

சொற்களை மாற்றுதல் அவரிடம் காணப்படும் ஓர் உத்தியாகும்.

சொற்களை மாற்றிச் சொல்வது கவிஞர்களுக்கு உரிய இயல்பு. தக்க சொல்லைத் தந்து மாற்றம் விளைவிப்பது அவர் தனிப்போக்காகும். அஃது இவரிடமும் காணப்படும்.

“திங்களில் அழகு ஒழுகுகிறது; பூக்களில் அழகு பொலிகிறது; பறவைகளின் அழகை என்னவென்று பன்னுவது! மகளிரோ அழகு மயமாகத் திகழ்கிறார்; குழவிகளோ அழகின் பிழம்பாக இலங்குகின்றன”

“குழந்தை ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கும்; பாம்பையும் கயிற்றையும் பொதுவாகவே பார்க்கும் சேற்றையும் சோற்றையும் சமமாகவே காணும்”. நோக்கும், பார்க்கும், காணும் எனத் தனித்தனிச் சொற்களை அமைத்தல் காண்க. பின்னிப் பிணையும் வாக்கியங்கள் அவர் எண்ணத் தெளிவையும் கட்டுரைத் தன்மையையும் காட்டுகின்றன.