பக்கம்:அணியும் மணியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

மக்கள் சிறந்தாராயினும் அவர்தம் அரசியல் சிறக்கவில்லையென்றால் நாடு முன்னேற்றம் அடையாது என்ற கருத்தை மற்றொரு பாடல் வற்புறுத்துகிறது. அரசன் மக்கட்கு உயிர் போன்றனாக மதிக்கப்பட்டான். மக்கள் தலைவனாகிய அரசியல் தலைவன் கொள்ளும் முடிவுகளை ஒட்டியே நாட்டு நன்மையும் அமைந்திருக்கின்றன என்பது யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மையாகும். எல்லாப் பொறுப்புகளும் அரசியல் தலைவனையே சாருகின்றன. அவன் சிந்தனையையும் செயலையும் ஒட்டியே உலகத்தின் நன்மையும் அமைதியும் அமைந்திருக்கின்றன என்று புறநானூறு கூறுகின்றது. இன்றைய அரசியலிலும் இந்தப் பேருண்மையைக் காணலாம். ஓர் அரசியல் தலைவன் செய்யும் சிறு பிழையால் உலகத்தில் பெரும் போரை மூட்டி விடலாம்; அதனால் உலகத்தையே அழித்துவிடக் கூடும். அதனால்தான், ‘மன்னனாகிய உயிரை உடைத்து இப்பரந்த இடத்தையுடைய உலகம். இந்த உலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று: அரசனே உயிர் என்பதை அறிதல் அரசனது கடமையாகும், என்று புறப்பாடல் உணர்த்துகிறது.

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்;
அதனால், யானுயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே - 186

என்று வேந்தனின் கடமையை உணர்த்துமாற்றால், அவன் உலகுக்கு உயிர் போன்றவன் என்பதை எடுத்துக்காட்டுகிறது. படைவன்மை மிக்க அரசன் உலகத்தை அழிக்காமல் இருக்க எல்லா வகையானும் முற்பட வேண்டும் என அறிவுறுத்துவார், ‘வேல் மிகு தானை வேந்தன்’ என இதன் ஆசிரியராகிய மோசிகீரனார் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தில் பிறர்க்குத் தீமை செய்யாமல் இருத்தலே பேரறமாகும். நம்மால் பிறருக்கு நன்மை செய்ய இயலாவிட்டாலும் பிறர்க்குத் தீமையாவது செய்யாமல் இருத்தல்