பக்கம்:அணியும் மணியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே - 188

என்ற பாட்டு மழலை பேசும் குழவியின்பத்தை எடுத்துக்கூறி, குழந்தையில்லாவிட்டால் இல்லற வாழ்வில் இன்பமும் பயனும் இல்லை என்ற உண்மையை மிக அழகாகத் தம் அனுபவத்தோடு அமைத்துப் பாடியிருப்பது நமக்கு இன்பம் பயக்கிறது. ‘குறு குறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்’ என்று அழகாகத் தக்க சொற்களைக் கொண்டு குழந்தையின் செயல்களைக் காட்டியிருப்பது போற்றத்தக்கதாகும். குழந்தையின் செயல்கள் நம் அறிவை மயக்கும் இயல்பின என்று கூறுகிறார். “உச்சிதனை முகர்ந்தால் உன்மத்தம் ஆகுதடி” என்று பாரதியார் குழந்தை தம் அறிவை மயக்கும் செய்கையைக் கூறுவதும் இந்த மயக்குறு நிலைமையைத்தான் காட்டுகிறது போலும்.

இதுவரையில் பலர் தம் வாழ்நாட்களுக்குப் பிறகு நரகம் நண்ணாமல் இருக்கக் குழந்தைப்பேறு வேண்டும் என்ற தவறான கருத்தைக் கூறி வந்தனர். பாண்டியன் அறிவுடை நம்பி யாகலான் அவ்வாறு கூறாமல் தாம் வாழும் நாளிலேயே அடையும் இன்பப் பயன் குழந்தைப்பேறு என்ற கருத்தைச் சொல்லியிருப்பது அறிவோடு பொருந்துவதாக இருக்கிறது. ‘பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே’ எனக் கூறியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவரின் பாட்டு, உலகவியல்பை ஆராய்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய மனவியல்பைக் காட்டி உள்ளத்தின் சோர்வைப் போக்குவதாக உள்ளது. இன்பமும் துன்பமும் இயற்கைப் படைப்பின் உண்மைகளாகும். மனிதரும் உலகத்தில் இன்பத்தையும் துன்பத்தையும் உண்டாக்குகின்றனர். சாவும் வாழ்வும், செல்வமும் வறுமையும், கொடுமையும் நன்மையும், இன்பமும்