பக்கம்:அணியும் மணியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அறிவிக்கின்றது. அவர் வாழ்வே அதற்குத் தக்க எடுத்துக்காட்டாகவும் விளங்கியிருக்கிறது. அவர் ஆண்டுகள் பலவாகியும் நரையில்லாமல் விளங்கி வாழ்க்கையில் இன்பமும் பொருளும் பெற்று அமைதியும் அறிவும் உற்றுச் சான்றோராக வாழ்ந்திருந்தார். அவர் தம் வாழ்வின் அனுபவத்தை உலகத்துக்குச் சொல்லும்பொழுது ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையையுடைய சான்றோர்கள், தாம் வாழ்ந்த ஊரில் வாழ்ந்ததால்தான் அத்தகைய மனவமைதி பெற முடிந்தது என்று கூறியுள்ளார்.

“ஆண்டுகள் பலவாகியும் நரையில்லாமல் இருப்பது எவ்வாறு இயன்றது என்று கேட்டால், மாட்சியுடைய என் மனைவியும் புதல்வரும் அறிவால் நிறைந்தவர்கள் யான் கருதியதைத் திறம்படச் செயலாற்றும் ஏவலிளைஞர் எனக்கு உள்ளனர். வேந்தனும் முறையல்லன செய்யாமல் நாட்டைக் காக்கும் நல்லாட்சியுடையன் யான் இருக்கும் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையினையுடைய சான்றோர்கள் பலர் வாழ்கின்றார்கள்” என்று, தம் வாழக்கையின் அனுபவத்தை எடுத்துக் கூறுகின்றார்.

யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கா கியரென வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே - 191

என்று “நரை நுமக்கில்லாமல், இருப்பது ஏன்?” என்று வினவியவர்க்கு இறுத்த விடையாக இப்பாடல் அமைந்துள்ளது. நரையில்லாமைக்குக் காரணங் கூறுவார் போன்று சான்றோரின் தொடர்பு உள்ளத்தின் வளர்ச்சிக்கு வேண்டுவதாகும் என்ற கருத்தை வற்புறுத்துகிறார்.