பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187


(தொகையறா)

சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்!
அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்!
பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்!
வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்!

(பாட்டு)

அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்!
எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
என்னும் நிலைமை வரும்-அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்து விடும்!(அது)
அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
வியாபாரிகள் எனும் பெயரடைவார்!(அது)
மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
வெளிக்காட்டும் புதியகலை!(அது)