பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

"நீங்கள் நன்றாக வளர்வீர்கள்" என்று ஆசீர்வதித்தார். நான் மறுநாளே பாடலை இயற்றி, அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். பாடிக் காட்டச் சொன்னார். பாடினேன். பரவசப்பட்டார். அந்தப் பாடல்தான் "சீனத்து ரவிக்கை மேலே" எனத் தொடங்கும் பாடல். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் பாகவதர் படம் வெளி வர மிகவும் தாமதம் ஆயிற்று. அண்ணன் N.S.K. அவர்கள் அந்தப் பாடலைப் பாடவில்லை. அது "முல்லைவனம்" என்ற படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது. அவருக்கு நான் எழுதிய அடுத்த பாடல் "ராஜா ராணி" என்ற படத்தில் வந்த "சிரிப்பு" என்று தொடங்கும் பாடல். அதை அவர் எழுதச் சொன்னது உடுமலையாரிடம். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பாடல் சரியாக அமையாததால், இருவரும் சேர்ந்தே ஆள் அனுப்பி, என்னைக் கூப்பிட்டு, "சிரிப்பு! அதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பது நம் பொறுப்பு" என்ற பல்லவியைக் கொடுத்து, பாடலை முடித்துத் தரச் சொன்னார்சள். நான் மறுநாளே அந்தப் பாடலை முடித்துக் கொடுத்தேன். அதில் கடைசி வரியை "இது சங்கீதச் சிரிப்பு" என முடித்திருந்தேன். அந்தச் சங்கீதச் சிரிப்புக்கு, ஆவர்த்தனக் கணக்கும் போட்டு இரண்டு ஆவர்த்தனம், ஒரு ஆவர்த்தனம் எனக் குறைத்துக் கொண்டு வந்து அவர் முடித்ததை நினைத்து, இன்றும் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

ஆனால் அந்தச் சிரிப்பு என்னைப் பொறுத்தவரை அழ வைத்துச் சென்று விட்டது. கலைவாணர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், எனக்கும் எனது மனைவிக்கும் தீபாவளிக்கு, பட்டுவேட்டி, பட்டுச் சேலை அனுப்பி வைத்ததை நினைத்து, நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறது. அந்த கலைவாணருக்கு ஈடு அவரேதான்.

நான் ஆரம்பக் காலத்தில், புரசவாக்கத்தில் கந்தப்ப ஆச்சாரித் தெருவில் 17-ம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தேன்.