பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


அருவிக் கரை ஓரத்திலே அமைதி கொஞ்சும் நேரத்திலே
பருவக் காற்று வீசுது! பல கதைகள் பேசுது!(அருவி)


உருவமில்லா ஒருவன் உலகில் ஒண்ணைப் படைச்சானாம்!
அந்த ஒண்ணுக்குள்ளே பலபொருளை உணரவச்சானாம்!
கண்ணுக்குள்ளே துள்ளும் மீனைக் காண வச்சானாம்
கன்னத்திலே ரோஜாப்பூவை மின்ன வச்சானாம்(அருவி)


அன்னத்தையும் நடையிலே அமரவச்சானாம்-காற்றில்
ஆடுகின்ற பூங்கொடி போல் இடை யமைச்சானாம்!
வண்ண நிலா தன்னைப் போல முகம் அசைச்சானாம்!
வானவில்லைப் புருவமாக மாற்றி வச்சானாம்(அருவி)


கோவைக் கனி தன்னை உதட்டில் குவிய விட்டானாம்-இன்பம்
கொஞ்சும் கிளி மொழியை நாவில் உலவ விட்டானாம்!
மேகத்தையும் கூந்தலாக மேய விட்டானாம்-அந்த
தேகத்துக்குப் பெண் என்னும் பெயரை இட்டானாம்!(அருவி)


அழகுநிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

மருத-9