பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ் வளாச்சியில் மணவையாா் செய்த புரட்சி


பெரிதும் விரும்புகிறேன். உன்னால் சில தமிழ்ப் பணிகளை தமிழில் சில சாதனைகளைச் செய்ய முடியும் என்பது என் திடமான நம்பிக்கை. நீயும் அப்படிப்பட்ட இலட்சிய வெறியோடு இருப்பதை நான் நன்கறிவேன். பிற்காலத்தில் உலகம் உன்னை இனங்காணவும், இஸ்லாமியப் பெயரின் மூலம் உன் இஸ்லாமியச் சமுதாயத்தின் பெருமை உயரவும் வாய்ப்பாக இருக்கும்" என்று கூறி முஸ்தபாவை ஊக்குவித்தார். தன் குருநாதர் தெ.பொ.மீ அவர்களின் கருத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் தந்து அக்கருத்தை அப்படியே பின்பற்றும் முஸ்தபா, எப்போதும் தன்பெயரோடு தன் ஊரான 'மணப்பாறை'யின் சுருக்கமான 'மணவை'யை இணைத்துக் கொள்வது வழக்கம். அவ்வூரின் மீது அவருக்கு எப்போதும் அலாதிப் பிரியம். தான் இளமையில் திறம்பட உருவாகக் காரணமாக இருந்த ஊர் என்ற நன்றியுணர்வால் தன் பெயரை 'மணவை முஸ்தபா' என அமைத்துக் கொண்டார். அதுவும் கூட இன்று 'மணவையார்' எனச் சுருங்கி விட்டது. தமிழார்வமும் தமிழறிவும் இவருள் பொங்கிப் பொழியவே தமிழை வளர்க்க, வளப்படுத்த இவர் உள்ளம் அவாவியதில் வியப்பொன்றும் இல்லை.

தொடர்ந்து பரிசுகள்

இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் திராவிட இயக்கச் செயல்பாடுகள் தமிழார்வலர்களிடையே ஒருவித மலர்ச்சியை - மனக்கிளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந் தற்கொப்ப, இவரும் அவ்வுணர்வுகட்கு ஆட்பட்டவராக இருந்தார். இந்தி எதிர்ப்புணர்வும் தனித்தமிழார்வமும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்ப் பற்றை வளர்க்கலாயின. பேச்சுப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் தொடர்ந்து பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில