பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரா. நடராசன்

195


கிறது. பல்லாயிரக்கணக்கான புதிய சொற்களை - காலத்திற் கேற்ற சொற்களை - அறிவு உலகத்திற்கேற்ற சொற்களைக் "கூரியர்" இதழ் தமிழுக்கு வழங்கிவருகிறது. "Computer" என்னும் ஆங்கிலச் சொல் இன்று உலகமெங்கும் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுவரும் சொல். "Computer" துறையில் தமிழகம் உலக முன்னணி பெற்றுவரும் இந் நாளில் இந்த ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் தேவைப்பட்டது. சிலர் "கணிப்பொறி" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். "கணிதி" என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டது. "கூரியர்" தமிழ்ப்பதிப்பில் "கணினி" என்ற சொல் பதினைந்து ஆண்டுகட்கு முன்பே உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று "கணினி" என்ற சொல்லே ஆட்சித்துறையிலும், கல்வித் துறையிலும், தொழில் நுட்பத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் தொடர்புடைய 'மென்பொருள்' (Software), இணையம் (Internet), 'வன்பொருள்' (Hardware) என்ற சொற்களும் 'கூரியர்' புனைந்த புதிய சொற்களேயாகும். அதேபோன்று "AIDS" (Acquired Immuno Deficiency Syndrome) என்ற சொல்லுக்கு "ஏமக்குறைவு நோய்" என்ற சொல்லை உருவாக்கி வழக்குக்குக் கொண்டுவந்தது, "ஏமக் குறைவு நோய்: உலகளாவிய நெருக்கடி" என்ற மையப்பொருளுடன் ஒரு சிறப்பிதழும் (1995 ஆகஸ்ட்) வெளிவந்தது. ஆங்கிலத்தில் Institution, Organisation, Net work போன்ற சொற்கள் வேறுபட்ட பொருட்சாயல்களைக் கொண்டவை. இச்சொற்களுக்கு இணையாக நிறுவனம் (Institution) அமை வனம் (Organisation), இணைவனம் (Network) என்ற மாறு பட்ட சொற்களைத் தமிழில் உருவாக்கிக் "கூரியர்" தமிழ்ப் பதிப்பு பயன்படுத்திவருகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல புதிய சொற்களை ஆக்கிக்கொடுத்துத் தமிழின் சொற்களஞ்சியத்திற்குக் "கூரியர்" இதழ் வளம் சேர்த்துவருகிறது.