பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

மொழி பெயர்ப்புப் பணியில் பரவையார்


"பண்டைக் காலத்தையும் இக்காலத்தையும் இணைப் பதற்கும் மொழி பெயர்ப்பே பெருந்துணையாக அமைகிறதெனலாம். சான்றாக, சங்க காலத் தமிழ் வேறு, இக்கால வழக்கிலுள்ள தமிழ் வேறு. பொருள் புரியாத பல சங்க கால இலக்கியச் சொற்களை இக்கால வழக்குச் சொற்களுக்கு மாற்றினாலொழிய அவற்றின் திரட்சியான பொருளை முழுமையாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. எனவே, முற்காலச் சிந்தனைகளை இக்காலச் சிந்தனைகளோடு இணைப்பதற்கும் மொழி பெயர்ப்புத் தேவைப்படுகிறது"

எனத் தெளிவுபடுத்துகிறார்.

'ஒரு மொழியில் இருப்பவற்றை மாற்றொரு மொழியில் தருவது மொழி பெயர்ப்பு' என்ற கண்ணோட்டமே பல தரப்பட்டோரிடம் இருந்து வருகிறது. இது முழுமையானதொரு கருத்தோட்டமாக இருக்க இயலாது என்பது இவர் எண்ணம்.

"எல்லாத் துறை, பொருள்பற்றிய செய்திகளை ஒரே மாதிரியான போக்கில் மொழி பெயர்க்க முடியாது; கூடாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அது பெருந்தவறாக முடியும் என்பது இவர் கருத்து. இதை மேலும் விவரிக்கும் போது "நாம் தரையில் நடப்பதற்கும் சரிவான மலைப் பாதையில் நடப்பதற்கும், நீரில் நடப்பதற்கும் வேகமாக ஓடும் ஆற்று நீரில் நடப்பதற்கும், மணலில் நடப்பதற்கும் பாறையில் நடப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. அதைப் போன்றே உரைநடை இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கும் கவிதை இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அறிவியல், தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் நுணுக்கமான வேறுபாடுகள் நிரம்ப உண்டு.