பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

109


அபுல்கலாம் ஆசாதின் சொல்லுக்குச் செயல் வடிவம் தந்த செம்மல்

இஸ்லாமியக் காப்பியமாகிய சீறாப்புராணம் பற்றிப் பிற சமயம் சார்ந்த அறிஞர்கள் பேசவும் எழுதவும் அவ்வப்போது மணவையார் ஏற்பாடு செய்துள்ளார். 'ஒரு சமயத்தைச் சார்ந்தோர் மற்றச் சமயத்தவரின் இலக்கியங்களை விருப்போடு படித்து அதன் சிறப்புகளை உளம்திறந்து பாராட்டிப் போற்றும் மனப்பக்குவம் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான ஒருமைப்பாட்டுணர்வு மக்களிடையே காலூன்ற முடியும்' என மறைந்த மாமேதையும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சருமாகிய அபுல் கலாம் ஆசாத் தெரிவித்த கருத்தை, இன்று செயல்படுத்தி வருகிறார் மணவையார்.

மணவையாரின் இம்முயற்சி 1976ஆம் ஆண்டு தொடங்கியது எனலாம். சென்னைப் புதுக்கல்லூரியில் முஸ்தபா ஏற்பாடு செய்த 'சீறாப் புராணம் கருத்தரங்கம்' நடந்தபோது, அதில் இஸ்லாமிய அறிஞர்களாகிய எம். அப்துல் வஹ்ஹாப், எம். சையத் முஹம்மத் ஹசன், கவி கா.மு.ஷெரீப், ஜே.எம்.சாலி, எம்.எம்.உவைஸ், எம்.எஸ். ர், சி. நயினார் முகம்மது ஆகியோருடன் மயிலை சீனி, வேங்கடசாமி, க.ப.அறவாணன், சிலம்பொலி சு.செல்லப்பன், சி. பஷீர், பாலசுப்பிரமணியன், கிருட்டிணா சஞ்சீவி, இரா. முத்துக்குமாரசாமி போன்ற பிற சமய அறிஞர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். இஸ்லாமிய மக்களிடையே முடங்கிக் கிடந்த சீறாப் புரணத்தின் பெருமையைத் தமிழ்கூறு நல்லுலசம் உணர்ந்து போற்ற இக்கருத்தரங்கம் பேருதவியாக அமைந்தது. பின்னர் மணவையார் அவர்களே இவ்வுரைகளைத் தொகுத்து 'சிந்தைக்கினிய சீறா' என்னும் நூலாகத் தமது மீரா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.