பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15

ண்ணப்பன் ஊரிலே உத்தமன் என்று பெயர் எடுத்தவன். ஒரு அழகான பெண்ணுக்குக் கணவன் என்ற பெருமை வேறு அவனுக்கு இருந்தது.

கண்ணப்பன் சின்னப்பிள்ளையிலிருந்தே கண்டியில் வளர்ந்தவன். கண்டியில் அவர்களுக்கு வட்டிக்கடை இருந்தது. சிங்கப்பூர் கடைக்குப் போகப் பிடித்தமில்லாமல் கண்டிக்கடைக்கே கண்ணப்பன் போய் வந்து கொண்டிருந்தான்.

கண்டியில் கொஞ்சநாள், தமிழ்ச் சங்கத் தலைவனாக இருந்தான். தமிழ், தமிழன் என்றால் கண்ணப்பனுக்கு உயிர்தான். வாரம்தோறும் தமிழில் சொற் பொழிவுகள் ஏற்பாடு செய்வான். கட்டுரைப் போட்டிகளை வைப்பான். இப்படியே கண்ணப்பனின் தமிழார்வம் வளர்ந்தது.

கண்ணப்பனுக்கு பெற்றோர்கள் மீது தணியாத மரியாதை உண்டு. அதைப்போலவேதான் அவன் தம்பி சொக்கநாதனிடத்திலும்! ஊருக்கு வந்தால் சின்ன விஷயத்தைக்கூடத் தம்பியைக், கலக்காமல் செய்ய மாட்டான்.

கண்ணா அந்த ஊரிலேயே அழகான பெண். அவளுடைய முழுப்பெயர் கண்ணாத்தாள். அந்த ஊர்க் கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வத்தின் பெயரும் கண்ணாத்தாள்தான். கோயிலூரில் பெரும்பகுதி மூத்த பெண்களுக்குக் கண்ணாத்தாள் என்றும், மூத்த பையன்களுக்குக் கண்ணப்பன் என்றும் தான் பெயர் சூட்டுவார்கள். திருமணத்திற்குப் பிறகுதான் கண்ணப்பன் கண்ணாத்தாளை ‘கண்ணா’ என்று செல்லமாக அழைக்கத் தொட்ங்கினன்.

கண்ணப்பனுக்கும், கண்ணுத்தாளுக்கும் நிச்சய மாயிற்று. கண்ணப்பனைக் கேட்காமலே முத்துக் கருப்பர் கண்ணாத்தாளை நிச்சயித்து விட்டுக் கடிதம் எழுதினர். ஏனென்றால் கண்ணாத்தாளுக்கு அவ்வளவு போட்டி இருந்தது.

கண்ணப்பன் தமிழகம் திரும்பி கண்ணாத்தாளை மணந்து கொண்டான். அதற்குப் பிறகு கண்ணப்பன் கண்டிக்குப் போகவில்லை. ஆனால் அங்கே பழகிய தேகப் பயிற்சியும், அங்கே ஏற்பட்ட தமிழ்ப் பற்றும் கண்ணப்பன் உடம்போடு ஒட்டிய அவயங்களாகி விட்டன.

ஊருக்கு வந்ததும் ஊரின் ஒரு முனையில் மறைமலை அடிகள் மன்றம் அமைத்தான். மன்றத்தின் கொல்லையில் ஒரு தேகப்பயிற்சி, சாலையையும் நிறுவிக்கொண்டான்.