பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இவரு! எங்க முதலாளிகிட்டே இன்னிக்கு நீ முறையா நடந்துக்கல்லேயின்னா என் சுயரூபத்தைக் காட்டித்தான் ஆகனும்! என்னிடத்திலே மாட்டை விரட்டும் தாருக்கம்பு குதிரையோட்டும் நீளச் சவுக்கு, மனுசன வதைக்கிற திருக்கைவாரு- எல்லாமே இருக்குது' என்று தனது கொடிய குரலால் நெருப்பைப் பொழிந்து விட்டு ராசாக்கிளி கிடுகிடுவென்று இறங்கிப் போய் விட்டார்.

கதவுகள் சாத்தப்பட்டன. மல்லிகைப் பூவின் நறுமணமும், ஊதுபத்திகளின் வாசனைப்புகையும் வெளியேற வழியில்லாமல் ஆலிங்கனம் செய்து கொண்டன. ஆனால் காசியப்பரும், சுபத்ராவும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் சண்டைக்காரர்களைப் போல பிரிந்தே உட்கார்ந்திருந்தார்கள். -

நேரம் செல்லச் செல்ல காசியப்பருக்கு வியர்வை கொட்டத் தொடங்கியது. ஜவ்வாது கரைந்து ஒழுகியது.

மனிதன் சாப்பிடுவதற்கே பசி என்ற உணர்ச்சி தேவைப்படும் போது சுகபோகங்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட உணர்ச்சி தேவைப்படாமல் போகுமா? அதனாலேயே காசியப்பர் மிருகத்தனமாக நடந்து கொள்ளவில்லை. அவர் அச்சம் கலந்த உணர்ச்சியில் சுதந்திரமில்லாத உணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் என்றும் இல்லாத அளவுக்குப் படபடத்தது.

உன் பெயரையாவது உன் வாயால் சொல்லேன்; உன் குரலாவது எனக்கு இன்பமூட்டட்டும்.'

சுபத்ராவிடமிருந்து எந்த பதிலுமில்லை!

காசியப்பர் கனிவாகப் பேசினார். 'உனக்கு இஷ்டமில்லாவிட்டால் எனக்கும் அவசியமில்லை. ஏதோ ராவுத்தர் வழக்கம் போல் அழைத்தார்; வந்தேன். உன்னைப் பார்த்தால் எனக்கும் இரக்கம்தான் வருகிறது. எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றன். ஆனால் எனக்கு மனைவி இல்லை. இறந்துவிட்டாள். அதனல்தான் நான் இப்படி அலைகிறேன்' காசியப்பர் அருள் வந்தவரைப் போல சுபத்ராவின் எழிலில் மயங்கி உண்மைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இந்தக் கட்டத்தில் சுபத்ரா பேசத் தொடங்கினாள். அது காசியப்பருக்கு மீனாட்சியம்மனே வாய் திறந்து பேசுவது போலிருந்தது.

'என்னை நீங்கள் மன்னித்து எப்படியாவது காப்பாற்றவேண்டும். நான் பி. ஏ. வரை படித்தவள். எனக்கு திருவனந்தபுரத்தில் ஒரு இண்டர்வியூ. அதற்காக எர்ணாகுளத்திலிருந்து புறப்ப்ட்டு திருவன்ந்தபுரத்திற்கு வந்தேன். வழியில் இரண்டு போலீஸ்காரர்கள் மடக்கி இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள்'