பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33


தானாக அந்தக் கவலை கரைந்தாலொழிய அல்லது நானாக மடிந்தாலொழிய என் கவலை தீரவே தீராது" என்றான் கண்ணப்பன்.

"கவலைகள் என்பது எல்லோர் மனத்திற்கும் பொதுவானதுதான். எப்பேர்ப்பட்ட கவலைக்கும் குறிப்பிட்ட ஆயுள் தான் உண்டு! நாள் செல்லச் செல்ல அதன் வேகம் தானாகக் குறைந்து விடும். இரண்டு வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் திடீரென்று புகுந்த கவலை இப்போது தணிந்து விட்டது. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அன்று தற்கொலை செய்து கொண்டு மடிந்து விடலாம் என்றுதான் நினைத்தோம். பிறகு எப்படியோ நாங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து விட்டோம்" என்றான் சசி.

"சசி, இவ்வளவு நாட்களாக நீ இதை என்னிடம் சொல்லவே இல்லேயே! அது என்ன உன் குடும்பத்தையே உலுக்கிய கவலை"

"காணாமல் போன சுபத்ரா என்ற என் தங்கையைப்பற்றிய கவலைதான்!"

"இரண்டு வருஷங்களுக்கு முன் போனவளா இன்னும் திரும்பவில்லை?"

"ஆம், அவள் இறந்து விட்டாள் என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். என் தாயிடமும் அப்படியே சொல்லிவிட்டோம் அவள் இருக்கிறாள் என்று இன்று நினைத்தாலும் என் தாயார் திடீரென்று மனம் குன்றிப் போய் விடுகிறார்கள்."

கண்ணப்பனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.கண்ணப்பன் அடைந்திருந்த அதிர்ச்சியை தபால்காரனின் மணிச்சத்தம் கலைத்தது. தபால்காரன் ஒரு கடிதத்தைக் கண்ணப்பனிடம் கொடுத்தான். அது கண்ணாத்தாளிடமிருந்து வந்த கடிதம், கண்ணப்பனுக்கு அவள் மீதிருந்த கோபத்தினால் அந்தக் கடிதத்தை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட நினைத்தான்.


-2-